
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், தன் காதலன் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்த பெண், அந்தப் புகார் ஒரு தவறான புரிதலால் அளிக்கப்பட்டது என்று கூறி பல்டி அடித்திருக்கிறார். இதனால், அந்த வழக்கில் சிக்கிய இளைஞர் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.
51 நாள் சிறையில் இருந்த இளைஞர்
இந்த வழக்கானது நவம்பர் 24, 2020 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது இளைஞர் கைது செய்யப்பட்டு, 51 நாட்கள் சிறையில் இருந்தார். பின்னர் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.
பெண் தனது புகாரில், 2017 ஆம் ஆண்டு முதல் இருவரும் உறவில் இருந்ததாகவும், தன்னைக் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக இளைஞர் வாக்குறுதி அளித்ததாகவும் கூறியிருந்தார். இந்த வாக்குறுதியின் பேரில், கொல்கத்தா சால்ட் லேக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் இருவரும் இரவு தங்கியதாகவும், அங்கு அவர்களுக்குள் உடல் உறவு ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். மறுநாள் காலை, அந்த இளைஞர் தன்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியிருந்தார்.
தவறான புரிதலால் புகார்:
வழக்கு விசாரணையின்போது, புகார்தாரர் பெண், இளைஞருடன் ஏற்பட்ட ஒரு தவறான புரிதல் காரணமாகவே தான் புகார் அளித்ததாக நீதிமன்றத்தில் கூறினார். மேலும், புகாரில் இருந்த வேறு எந்த விவரமும் தனக்கு நினைவில் இல்லை என்றும் தெரிவித்தார். அந்தப் புகார் தனது நண்பரால் எழுதப்பட்டதாகவும், அதன் உள்ளடக்கத்தை அறியாமல் தான் கையெழுத்திட்டதாகவும் அந்தப் பெண் மேலும் கூறினார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு:
குற்றச்சாட்டுக்கு ஆளான இளைஞர் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து, தான் நிரபராதி என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் ஆகஸ்ட் 28ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. "வழக்குத் தரப்பு குற்றச்சாட்டுகளை நிரூபிக்கத் தவறிவிட்டது. குற்றம்சாட்டப்பட்டவர் சந்தேகம் என்ற பலனைப் பெற தகுதியுடையவர்" என்று கூறிய நீதிபதி அனிந்தியா பானர்ஜி, இளைஞரை நிரபராதி எனவும் அறிவித்தார்.
இந்தத் தீர்ப்பில், புகார்தாரர் அளித்த ஆதாரங்களின்படி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக அவர் கூறிய ஒரே குற்றச்சாட்டு, இருவரும் உடல் உறவில் ஈடுபட்டதுதான் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. "இரண்டு வயது வந்த நபர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு கொண்டுள்ளனர்" என்று நீதிபதி கூறினார். மேலும், புகார்தாரரின் தாய், பாட்டி மற்றும் அண்டை வீட்டுக்காரர் என வேறு எந்த சாட்சியும் இளைஞருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தவில்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.