கர்நாடக முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட அம்மாநில அமைச்சர்கள் 3 பேருக்கு ரூ.10,000 அபராதம் விதித்துள்ள அம்மாநில உயர் நீதிமன்றம், அவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டுள்ளது
கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாநில கேபினட் அமைச்சர்கள் எம்பி பாட்டீல், ராமலிங்க ரெட்டி, காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோருக்கு தலா ரூ.10,000 அபராதம் விதித்து, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையா மார்ச் 6ஆம் தேதியும், போக்குவரத்து அமைச்சர் ராமலிங்க ரெட்டி மார்ச் 7ஆம் தேதியும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மார்ச் 11ஆம் தேதியும், கனரக தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் மார்ச் 15ஆம் தேதியும் ஆஜராக கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில ஒப்பந்தகாரர் சந்தோஷ் பாட்டீல் மரணம் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பாவை கைது செய்யக் கோரி, தற்போதைய முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பான வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.
உத்ராகண்ட் மாநில சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா தாக்கல்!
முன்னதாக, கடந்த 2022 ஆம் ஆண்டு உடுப்பியில் உள்ள ஒரு லாட்ஜில் 37 வயதான ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டார். அவர் இறக்கும் போது, பெல்காமில் தான் மேற்கொண்ட குடிமராமத்து பணிகளுக்கான நிதியை விடுவிக்க அப்போதைய அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கமிஷன் கோரியதாக வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்தார்.
இது அம்மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கே.எஸ்.ஈஸ்வரப்பா ராஜினாமா செய்யக் கோரியும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் டி.கே.சிவக்குமார், சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி அப்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மை இல்லத்தை நோக்க்கி பேரணியாக சென்றபோது கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு இடைக்கால தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.