படிச்சாலும் அறிவில்லாம சுத்துறவங்களுக்கு சரியான பாடம்.. விவசாயிக்கு சல்யூட் அடித்த போலீஸ்

By karthikeyan VFirst Published Mar 26, 2020, 2:09 PM IST
Highlights

கொரோனா குறித்த விழிப்புணர்வு குக்கிராமத்து விவசாயியிடம் இருப்பதையும் அவரது முன்னெச்சரிக்கை செயல்பாட்டையும் கண்டு வியந்த போலீஸ், அந்த விவசாயிக்கு சல்யூட் அடித்துள்ளார்.
 

கொரோனாவிலிருந்து தப்பிக்க, ஊரடங்கை அமல்படுத்தி தனித்திருத்தல் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தினாலும் கூட, பலர் அலட்சியமாக பொதுவெளியில் சுற்றி திரிகின்றனர். படித்தவர்களே கூட அலட்சியமாக இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் கிராமத்தில் ஒரு விவசாயியின் விழிப்புணர்வை கண்டு போலீஸ் சல்யூட் அடித்துள்ளார். 

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனாவின் பாதிப்பு, இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 660 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.

கொரோனா வைரஸ், சமூகத்தில் பரவுவதை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. ஆனால் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக மளிகை கடைகள் மற்றும் காய்கறிக்கடைகள் திறந்துள்ளன. 

மிகவும் அத்தியாவசிய தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தாலும், சிலர் வேண்டுமென்றே காரணமே இல்லாமல் வெளியே சுற்றித்திரிகின்றனர். தனிமைப்படுதல் மற்றும் சமூக விலகல் குறித்த விழிப்புணர்வை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தினாலும் சிலர் அலட்சியமாக இருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் காரணமில்லாமலும் பொய்யான காரணங்களை கூறியும் பொதுவெளியில் சுற்றிய 1100 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுவருகின்றன. 

படித்தவர்களே கூட கொரோனா குறித்த விழிப்புணர்வு இல்லாமல் பொதுவெளியில் சுற்றுவதையும் அலட்சியமாக இருப்பதையும் பார்க்கமுடிகிறது. அப்படியிருக்கையில், கர்நாடக மாநிலம் கல்புர்க்கியில் விவசாயி ஒருவர், ஹெல்மெட் அணிந்து மாட்டுவண்டியில் சென்றுள்ளார். அவரை விசாரித்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர், ஏன் ஹெல்மெட் அணிந்து செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, கொரோனா முன்னெச்சரிக்கையாக ஹெல்மெட் அணிந்ததாக கூறியுள்ளார். அந்த விவசாயியின் விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கையான செயல்பாட்டையும் கண்ட எஸ்.ஐ சுரேஷ் குமார், அவருக்கு சல்யூட் அடித்தார்.

படித்தும் விழிப்புணர்வு இல்லாமல் சுற்றுபவர்களுக்கு, கிராமத்தில் இருக்கும் விவசாயியின் விழிப்புணர்வும் சமூக பொறுப்பும் சரியான பாடம்.
 

click me!