நம்பிக்கை தரும் செய்தி..! கொரோனா பாதிப்பில் முழுமையாக மீண்ட 42 இந்தியர்கள்..!

By Manikandan S R SFirst Published Mar 26, 2020, 1:57 PM IST
Highlights

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தபோதும் இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. தற்போது வரை 42 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது.

உலகையே உலுக்கிய இருக்கும் கொடூர கொரோனா வைரஸ் இதுவரையிலும் 21000க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கியிருக்கிறது. சீனா, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா என 196 நாடுகளுக்கும் பரவிய கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. 4 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு உலக அளவில்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இதையடுத்து மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது போக்குவரத்துகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரையில் இந்தியா முழுவதும் 649 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 124 பேர் கொரோனா பாதிப்படைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இந்தியாவில் பலி எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தபோதும் இந்தியாவில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து உள்ளது. தற்போது வரை 42 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்திருக்கிறது. மேலும் பலர் அபாயக் கட்டத்தில் இருந்து மீண்டுவந்து சிகிச்சையில் இருப்பதாக மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனா குறித்த அச்சத்தில் இருந்த இந்தியர்களுக்கு கணிசமானோர் தற்போது குணமடைந்து வரும் தகவல் ஆறுதல் அளித்திருக்கிறது.

click me!