
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை உச்சத்தில் இருந்து வருகிறது. சந்தைகளில் வரத்து இல்லாததால் சில பகுதிகளில் தக்காளி விலை கிலோ ரூ.300/- வரை உயர்ந்துள்ளது. ஆனால், விண்ணைத் தொடும் விலை, இந்தியாவில் தக்காளி விவசாயிகளுக்கு ஒரு வரமாக மாறியுள்ளது.
தக்காளியை அதிக விலைக்கு விற்று பல விவசாயிகள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். அந்த வகையில் கர்நாடகாவில் ராஜேஷ் என்ற விவசாயி தனது தக்காளியை விற்று ரூ.40 லட்சம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது. ராஜேஷ் தக்காளி விலை உயரும் முன், 12 ஏக்கர் நிலத்தில் தக்காளியை பயிரிட்டார். இந்த சீசனில் தக்காளியை விற்று சம்பாதித்த பணத்தில் ஒரு எஸ்யூவி கார் வாங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய ராஜேஷ் “எனது 12 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளேன். கிட்டத்தட்ட 800 தக்காளி மூட்டைகளை விற்று ரூ. 40 லட்சம் சம்பாதித்தேன். சில மாதங்களுக்கு தக்காளியின் விலை இதேநிலையில் இருந்தால், எனக்கு ₹1 கோடி லாபம் கூட கிடைக்கும். நான் என் நிலத்தை நம்பினேன். எனது நம்பிக்கை வீண் போகவில்லை. தக்காளி விற்ற பிறகு ஒரு எஸ்யூவி வாங்க இது எனக்கு உதவியது,” என்று கூறினார்.
இப்போது நல்ல வாழ்க்கைக்கு போதுமான பணம் இருப்பதால் திருமணமாகாத அந்த விவசாயி மணமகளைத் தேடி வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ராஜேஷ் " பெண் வீட்டார், அரசு மற்றும் கார்ப்பரேட் வேலைகளுடன் கூடிய மாப்பிள்ளைகளை விரும்புவதால், நான் முன்பே நிராகரிக்கப்பட்டேன். சரியான நேரம் வந்தால் ஒரு ஊழியரை விட விவசாயிகளால் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று நான் கூற விரும்புகிறேன். எனது புதிய எஸ்யூவியில் சென்று இப்போது மணமகளைத் தேட விரும்புகிறேன்.” என்று பெருமிதத்துடன் கூறினார்.
முன்னதாக, கர்நாடக விவசாயி ஒருவர் ஜூலை 5 ஆம் தேதி இரவு 2.5 லட்சம் மதிப்புள்ள தக்காளி பயிர்கள் திருடப்பட்டதாக புகார் அளித்தார். இரவில் தான் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்திருந்தார்..
தக்காளியின் திடீர் விலை உயர்வுக்கு காரணம்?
கடுமையான வெப்பம், போதிய விளைச்சல் இல்லாதது, பருவமழை தாமதம், வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. தக்காளி விளைச்சல் அதிகரித்து, வரத்து அதிகரிக்கும் வரை விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி அவசரச் சட்டம் மாநிலங்களவையிலும் நிறைவேறியது!