லிங்காயத் சமூகத்தின் ஆதிக்கம் அதிகம் காணப்படும் பெலகாவி மாவட்டத்தில் 20 ஆண்டுகளாக பாஜக - காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
பெங்களூரு புறநகர் பகுதிக்கு அடுத்தபடியாக அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட பெலகாவி மாவட்டத்தில் உள்ளூர் பிரச்சினைகளை முறியடிக்கும் வகையில் லிங்காயத் அரசியல் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடுமையான போட்டியை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மகாராஷ்டிரா - கர்நாடகா இடையே எல்லைப் பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மகாராஷ்டிர ஏகிகரன் சமிதி (எம்இஎஸ்) கட்சியும் ஒரு சில தொகுதிகளை வசப்படுத்த வாய்ப்பு உள்ளது.
மகாராஷ்டிரா - கர்நாடகா எல்லையோர மாவட்டத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இது லிங்காயத்துகளின் கோட்டையாகவும், கடந்த இருபதாண்டுகளாக பாஜக கோட்டையாகவும் உள்ளது. கடந்த மூன்று தேர்தல்களைப் போலவே, பெரும்பாலான சட்டமன்றத் தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே நேரடிப் போட்டி இருக்க வாய்ப்புள்ளது. மராத்தி பேசும் மக்கள் அதிக அளவில் உள்ள 5 தொகுதிகளில் மட்டும் எம்இஎஸ் கட்சி போட்டியில் இருக்கும்.
undefined
பிஎஸ் எடியூரப்பாவை ஓரங்கட்டிய பிறகு லிங்காயத் சமூகத்தில் தலைமை வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. உள்ளூரைச் சேர்ந்த சுரேஷ் அங்காடி, உமேஷ் கட்டி போன்ற சில முக்கிய லிங்காயத் பாஜக தலைவர்கள் சமீபத்தில் மரணம் அடைந்துள்ளனர். இதனிடையே, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஜார்கிஹோலி குடும்பத்தின் அரசியல் செல்வாக்கு தேர்தலில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைவு! 5 ஆண்டுகளில் 12 சதவீதம் சரிவு!
முன்னாள் துணை முதல்வருமான லக்ஷ்மண் சவடி உட்பட மூன்று அதிருப்தி பாஜக தலைவர்களுக்கு சீட் மறுக்கப்பட்டதன் எதிரொலியாக பாஜகவின் சில வாக்குகள் பறிக்கப்பட வாய்ப்புள்ளது. மறுபுறம், முன்னாள் பம்பாய் மாகாணத்தின் ஒரு பகுதியாக இருந்த பெலகாவியில் கிட்டத்தட்ட 40 சதவீதம் மராத்தி மொழி பேசும் மக்கள் உள்ளனர். இதனால், பெலகாவியில் எல்லைப் பிரச்சினையை உயிர்ப்புடன் வைத்திருக்க எம்இஎஸ் கட்சி கடுமையாக முயற்சி செய்கிறது. எனவே எம்இஎஸ் கட்சி போட்டியிடும் ஐந்து தொகுதிகளில் மும்முனை போட்டி நிலவுகிறது.
மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் மட்டுமே மராத்தியர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மீதமுள்ள 13 தொகுதிகளில் லிங்காயத்துகள் பெரும்பான்மையாக உள்ளனர். ஒபிசி மற்றும் எஸ்சி/எஸ்டியினரின் கணிசமான மக்கள்தொகை உள்ளதால் இரண்டு இடங்கள் அவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
மூன்று சக்திவாய்ந்த குடும்பங்கள் - ஜார்கிஹோலி, ஜோல் மற்றும் காட்டி ஆகியவை தேர்தலில் தங்கள் செல்வாக்கைக் காண்பிக்க் வாய்ப்பு உள்ளது. ஜார்கிஹோலி குடும்பத்தைச் சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹோலி மற்றும் பாலச்சந்திர ஜார்கிஹோலி ஆகியோர் முறையே கோகாக் மற்றும் அரபாவி தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொருவரான சதீஷ் ஜார்கிஹோல் யெம்கன்மார்டி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
ஜார்கிஹோலி சகோதரர்கள் கட்சி மாறுவதற்குப் பேர்போனவர்கள். ரமேஷ் ஜார்கிஹோலி பாஜகவில் சேருவதற்கு முன்பு காங்கிரஸ் - ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசில் அமைச்சராக இருந்தார். 2019ல் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கூட்டணி அரசை கவிழ்க்க பாஜகவுக்கு உதவிய 17 எம்எல்ஏக்களில் அவரும் ஒருவர். மாவட்டத்தில் அவரது செல்வாக்கு வலுவானதாக உள்ளது.
ஜோல் குடும்பத்தைச் சேர்ந்த, தற்போதைய அறநிலையத்துறை அமைச்சர் ஷஷிகலா ஜோல் நிப்பானி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரது கணவர் அன்னா சாஹேப் ஜோல் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிக்கோடியில் இருந்து பாஜக மக்களவை உறுப்பினராக உள்ளார்.
காட்டி குடும்பத்தில் இருந்து, 2009-2014 வரை சிக்கோடி நாடாளுமன்றத் உறுப்பினராக இருந்த் ரமேஷ் காட்டி, இம்முறை சிக்கோடி-சடல்கா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். அவரது மருமகன் நிகில் காட்டி ஹுக்கேரி சட்டமன்றத் தொகுதியில் களமிறங்குகிறார். அகால மரணமடைந்த இவரது தந்தை உமேஷ் காட்டி, எட்டு முறை எம்எல்ஏவாகவும், ஆறு முறை அமைச்சராகவும் இருந்தவர்.
சீட்டு மறுக்கப்பட்டதால் பாஜகவில் இருந்து விலகிய லக்ஷ்மண் சவடி, தனது ஏற்பட்ட அவமானத்திற்குப் பழிவாங்க, பாஜக வேட்பாளர் மகேஷ் குமதல்லிக்கு எதிராக அத்தானி சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார். இப்போது பாஜக வேட்பாளராக இருக்கும் ரமேஷுக்கு பெலகாவி ஊரகத் தொகுதியில் போட்டியிடும் லக்ஷ்மி ஹெப்பால்கர் போன்ற சில காங்கிரஸ் தலைவர்களுடன் கருத்து வேறுபாடு உள்ளது. இருவரும் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டாலும், தனிப்பட்ட விரோதத்தை தீர்த்துக்கொள்ள ஒருவரையொருவர் தோற்கடிக்க கடுமையாக முயற்சி செய்கின்றனர்.
பெலகாவி மாவட்டத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளில் 39.01 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், 19,68,928 ஆண் வாக்காளர்கள், 19,32,576 பெண்கள் மற்றும் 141 பேர் இதர வாக்காளர்கள் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. 2018 தேர்தலில், பிஜேபி 10 தொகுதிகளிலும் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் வென்றன. இது 2019ஆம் ஆண்டில் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் - ரமேஷ் ஜார்கிஹோலி (கோகாக்), மகேஷ் குமதல்லி (அத்தானி) மற்றும் ஸ்ரீமந்த் பாட்டீல் (காக்வாட்) - பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர்.