Karnataka election 2023: காங்கிரஸ் கட்சியில் இணைந்த கீதா சிவராஜ் குமார்? யார் இவர்? தாக்கத்தை ஏற்படுத்துவாரா?

By Dhanalakshmi G  |  First Published Apr 28, 2023, 1:20 PM IST

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரும், நடிகருமான சிவராஜ் குமாரின் மனைவி கீதா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


கன்னட திரையுலகை தனது கையில் வைத்திருந்த பிரபல நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமார். இவரது மனைவி கீதா. ராஜ்குமார் கன்னட திரையுலகில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், ஒருபோதும் அரசியலில் நுழையவில்லை. ஆனால், அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பிரபலமாக இருந்தார். 

இவரை சந்தனக் கடத்தல் வீரப்பன் கடத்தி வனத்தில் வைத்து இருந்தபோது, ரஜினிகாந்த் உள்பட பிரபலங்கள் வனத்திற்குள் சென்று வீரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர். அப்போது கர்நாடகா, தமிழ்நாடு அரசுகள் ஆடிப் போயின. பின்னர், பத்திரமாக ராஜ்குமார் மீட்கப்பட்டார். அவர் மறைந்து இருந்தாலும், இன்றும் கன்னட உலகம் அவரைப் போற்றுகிறது.

Tap to resize

Latest Videos

இவரது குடும்பம் எப்போதும் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தது. ஆனால், சிவராஜ் குமாரின் மனைவி கீதா அரசியல் பின்புலம் கொண்டவர். அவரது தந்தை எஸ். பங்காரப்பா. கர்நாடகா முன்னாள் முதல்வர். பங்காரப்பாவின் மகன்களான மது பங்காரப்பா காங்கிரஸ் சார்பில் சொரபா தொகுதியில் போட்டியிடுகிறார். இவரது சகோதரர் குமார் பங்காரப்பா பாஜக சார்பில் போட்டியிடுகிறார். மது  பங்காரப்பா ஜேடிஎஸ் (மதச்சார்பற்ற ஜனதாதளம்) கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டவர்.

இந்த நிலையில்தான் இன்று காங்கிரஸ் கட்சியில் கீதா சிவராஜ் குமார் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இவர் கட்சியில் சேருவதற்கு சமூக வலைதளங்களில் ஆதரவு, எதிர்ப்பு என்று இரண்டும் கலந்த விவாதம் நடந்து வருகிறது. ஆனால், தனது மனைவி காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு சிவராஜ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

பெண்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ராகுல்... கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை கவர்ந்த வாக்குறுதி!!

இதுகுறித்து சிவராஜ் குமார் கூறுகையில், ''தனது வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் என்பதற்காக கீதா இந்த முடிவை எடுத்து இருக்கிறார். அவருக்கு என்னுடைய ஆதரவு என்றும் உண்டு. நானும். கீதாவும் காங்கிரஸ் கட்சிக்கான பிரச்சாரத்தில் கலந்து கொள்வோம். சொரபா தொகுதியில் போட்டியிடும் மது பங்கரப்பாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வேன். அதேபோல், ஷிர்சி தொகுதியில் போட்டியிடும் பீமன்னா நாயகாவையும் ஆதரித்து பிரச்சாரம் செய்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Karnataka Elections : 6 நாட்களில் 22 பேரணிகள்.. நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி..

இன்று பெங்களூருவில் கர்நாடகா காங்கிரஸ் கட்சித் தலைவர் டிகே சிவகுமார் தலைமையில் கீதா கட்சியில் இணைந்தார். தனது மனைவியுடன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்று சிவராஜ் குமார் கூறியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. கர்நாடகா மாநிலத்தில் தனக்கென பெரிய அளவிலான ரசிகர்களை சிவராஜ் குமார் வைத்து இருக்கிறார். இவர் சிவண்ணா என்றும் அழைக்கப்படுகிறார். இது காங்கிரசுக்கு ஆதரவாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படுகிறது. இரண்டே தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன் என்று அவர் கூறியிருந்தாலும், அருகில் இருக்கும் மற்ற தொகுதிகளிலும் இவரது பிரச்சாரம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். 

2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜேடிஎஸ் கட்சி சார்பில் சிவமோகா தொகுதியில் கீதா போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். இதற்குப் பின்னர் எந்தக் கட்சியிலும் இணையாமல் இருந்தார். அப்போது இவரது சகோதரர் மது பங்காரப்பா ஜேடிஎஸ் கட்சியில் இருந்தார். இதற்குப் பின்னர் காங்கிரஸ் கட்சியில் மது பங்காரப்பா இணைந்தார். கீதாவும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானார். 

கீதாவின் தந்தை யார்?
எஸ். பங்காரப்பா 1990 முதல் 1992 வரை கர்நாடகாவின் 6வது முதலமைச்சராக இருந்தார். இதற்கு முன்னதாக, 1967 மற்றும் 1996 க்கு இடையில் கர்நாடகாவின் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார். 1996 முதல் 2009 வரை மக்களவைக்கான தேர்தலில் ஆறு முறை போட்டியிட்டார், இவற்றில் இரண்டில் தோல்வியடைந்தார். 44 ஆண்டுகால இவரது அரசியல் வாழ்க்கையில் கர்நாடக விகாஸ் கட்சி மற்றும் கர்நாடக காங்கிரஸ் கட்சி ஆகியவற்றை நிறுவினார். இவர் தோற்கடிக்க முடியாத தலைவர் என்றே அழைக்கப்பட்டார். இந்த இரண்டு கட்சிகளுடன், பங்காரப்பா பல்வேறு கால கட்டங்களில், இந்திய தேசிய காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சிகளிலும் உறுப்பினராக இருந்தார்.

பங்காரப்பா 1985-ல் கர்நாடக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். 1987 வரை அந்தப் பதவியில் இருந்தார். 1989ல் காங்கிரஸ் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து வீரேந்திர பாட்டீல் அமைச்சரவையில் விவசாய அமைச்சரானார். ராஜீவ் காந்தியின் உத்தரவின் பேரில் பாட்டீல் உடல் நலக் குறைவால் நீக்கப்பட்டார். இதையடுத்து, 1990 ஆம் ஆண்டு மாநிலத்தின் முதலமைச்சராக பங்காரப்பா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 1992 இல், பங்காரப்பாவிற்குப் பதிலாக வீரப்ப மொய்லி முதலமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!