
விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தையை தத்தெடுத்த கர்நாடக அரசு! இனி அரசே வளர்க்கும்...
கர்நாடகாவில் இன்று ஏற்பட்ட கட்டிட விபத்தில் பெற்றோரை பறிகொடுத்த குழந்தை ஒன்றை அம்மாநில அரசு தத்தெடுத்துள்ளது. தாயுள்ளத்துடன், குழந்தையை தத்தெடுத்த கர்நாடக அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கர்நாடக மாநிலம் எஜிபுராவைச் சேர்ந்தவர் குணேஷ் . இவருக்கு சொந்தமான 20 ஆண்டு பழைமையான அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று அப்பகுதியில் உள்ளது. இதில் 4 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
இந்நிலையில் ஒரு வீட்டில் இன்று காலை 7 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.. இந்தக் கட்டிட விபத்தில் குடியிருப்பில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 பெண்கள் உள்பட 6 பேரின் உடல்களை மீட்டுள்ளனர்.
விபத்தில் இறந்தவர்களில் கலாவதி , ரவிச்சந்திரன் என்ற இருவரின் உடல்கள் மட்டும் அடையாளம் காணப்பட்டுள்ளன. . மேலும், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 2 குழந்தைகள் உயிருடன் காப்பாற்றப்பட்டனர்.
இதில் ஒரு குழந்தையின் பெற்றோர் உயிரிழந்ததால், அந்தக் குழந்தையை கர்நாடக அரசே தத்தெடுத்து வளர்க்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
பெற்றோர்கள் இறந்ததையடுத்து யாரும் இல்லாமல் தவித்த அந்த குழந்தையை அரசே தத்தெடுத்து வளர்க்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பராராட்டுக்ள் குவிந்து வருகின்றன.