கர்நாடக தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிகிறது! முக்கிய கட்சிகளின் செல்வாக்கு எப்படி?

By SG Balan  |  First Published May 8, 2023, 4:43 PM IST

ஆளும் பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே இந்தத் தேர்தலில் நெருக்கமான போட்டி இருக்கும் என்று சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மையைப் பெறாவிட்டால், கிங் மேக்கராக உருவாகலாம் என்று ஜேடிஎஸ் நம்புகிறது.


கர்நாடகாவில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மே 10ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 13ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது. வரும் புதன்கிழமை வேட்பாளர்களின் தலை எழுத்தை கர்நாடக வாக்காளர்கள் முடிவு செய்ய உள்ளனர்.

இந்நிலையிரல், ஆளும் பாஜக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு இடையே இந்தத் தேர்தலில் நெருக்கமான போட்டி இருக்கும் என்று சில கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மையைப் பெறாவிட்டால், கிங் மேக்கராக உருவாகலாம் என்று ஜேடிஎஸ் நம்புகிறது.

Latest Videos

பெங்களூருவில் ஸ்கூட்டரில் சென்று டெலிவரி ஊழியர்களுடன் தோசை சாப்பிட்ட ராகுல் காந்தி!

மோடியை நம்பும் பாஜக

சில கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சற்று சாதகமான முடிவுகளைக் கூறிய பிறகு, பாஜக படு தீவிரமான பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டது. குறிப்பாக கடைசி கட்டத்தில், அக்கட்சியின் பெரிய தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் 20 இடங்களில் ரோடு ஷோ எனப்படும் ஊர்வல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

பெங்களூரில் இரண்டு நாட்கள் நடந்த மெகா ரோடு ஷோ தவிர, 25 சட்டசபை தொகுதிகளில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்துள்ளார். மோடி காங்கிரஸுக்கு எதிராக இரண்டு வகையில் தாக்கிப் பேசினார். தன் மீது 91 அவதூறுகளைக் காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது என்பதைக் கூறிவந்தார். இதேபோல பஜ்ரங் தளம் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியதை கடுமையாகச் சாடினார். மக்களுடன் உணர்வுபூர்வமாக தொடர்பு கொள்ளும் வகையில், "ஜெய் அனுமான்" என்று கூறிக்கொண்டே ஓட்டு போடுமாறு கேட்டுக்கொண்டார்.

இது தவிர, தற்போதைய ஆட்சியில் எஸ்சி, எஸ்டி, லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்களுக்கு கூடுதல் இடஒதுக்கீடு வழங்கியதால் அவர்களின் வாக்கு வங்கி பாஜக பெரிதும் நம்பியுள்ளது. முஸ்லீம்களுக்கான 4% இடஒதுக்கீட்டை ரத்து செய்து இந்த இடஒதுக்கீட்டை வழங்கியதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவகாரத்தில் காங்கிரசை குறிவைத்து தாக்கினார். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் பாஜகவின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளனர். ஆனால், அது வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழ்நாடு அமைதியான மாநிலம்... போலி வீடியோவைப் பரப்பி அமைதியை சீர்குலைக்கக் கூடாது: உச்ச நீதிமன்றம்

வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் 3 சமையல் எரிவாயு் சிலிண்டர்கள் இலவசம், தினமும் அரை லிட்டர் பால் இலவசம் என கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. 1985ஆம் ஆண்டு முதல் மாநிலத்தில் எந்தக் கட்சியும் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்யவில்லை. ஆனால் பாஜக இந்த வரலாற்றை மாற்றி எழுதும் நம்பிக்கையில் உள்ளது.

பாஜகவின் மூத்த தலைவர்கள் பலருக்கும் இந்தத் தேர்தலில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஜெகதீஷ் ஷெட்டர், லட்சுமன் சவடி ஆகியோர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து களம் காண்கின்றனர். கர்நாடகாவில் 5 முறை முதல்வராக இருந்த பாஜகவின் பழம்பெரும் தலைவரான எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார். தற்போதைய முதல்வர் பசவராஜ் பொம்மை ஆட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன. இவை பாஜகவுக்கு பின்னடைவு ஏற்படுத்தும் அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

கமிஷன் ஆட்சியைச் சாடும் காங்கிரஸ்

ஒரு காலத்தில் தனது கோட்டையாக இருந்த கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நம்பிக்கையில் காங்கிரஸ் உள்ளது. பிரதமர் மோடியின் கடைசி பிரச்சாரம் தாக்கத்தைச் செலுத்தியுள்ள போதிலும், காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் கட்சி வெற்றி பெறும் என நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றனர். பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை மையமாக வைத்து, கடந்த ஒரு மாதமாகவே பிரச்சாரம் செய்துவருகிறது. இது தவிர காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000, வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.3000 என கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்திருக்கிறது.

இருப்பினும், கட்சி தனது பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் இரண்டு விஷயங்களில் தவறு செய்தது. அந்தக் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடியை விஷப்பாம்பு என்று விமர்சித்தது. பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்யப்போவதாக அறிவித்தது. இந்த அறிவிப்புகள் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தும் எனக் கருதப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே சிலர் இவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஹாசன் பவானியின் எழுச்சியும் சித்தராமையாவை மாற்றிய நிகழ்ச்சியும்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் கர்நாடகாவில் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார். பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி 40 சதவீதம் கமிஷனை எப்படிப் பங்கு போட்டுக்கொள்கிறது என்று கேள்வி எழுப்பினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஹுப்பள்ளியில் சோனியா காந்தியின் நடத்திய பேரணி கட்சியின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. பாஜகவின் இருண்ட ஆட்சிக்கு முடிவு கட்டுமாறு சோனியா காந்தி வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிங் மேக்கர் ஆகுமா ஜனதா தளம் (எஸ்)?

முன்னாள் பிரதமர் ஹெச். டி. தேவகவுடா மற்றும் அவரது மகன் ஹெச். டி. குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ், இந்தத் தேர்தலில் மூன்றாவது பெரிய கட்சியாக களம் காண்கிறது. ஜே.டி.(எஸ்) தேர்தலுக்காக முன்கூட்டியே தயாராகிவிட்டபோது, இறுதிக்கட்ட பிரசாரத்தில் சற்று சுணங்கிவிட்டது. தேவகவுடா மற்றும் குமாரசாமி ஆகியோருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது பிரச்சாரத்தில் பெரிய தடையாக இருந்தது. இதனால், பிரச்சாரத்தின் இறுதிக் கட்டத்தில், வட கர்நாடகத்தின் சில பகுதிகளில் கவனம் செலுத்த முடியவில்லை.

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலன், வறுமை, பிராந்திய வளர்ச்சி மற்றும் சமூக நீதி போன்ற மாநில பிரச்சினைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற முடியும் என்று ஜேடிஎஸ் என்று நம்புகிறது. பல கருத்துக்கணிப்புகளில் தொங்கு சட்டசபையை அமையலாம் என்று கூறப்படுவதால், மீண்டும் கிங் மேக்கராக உருவாகலாம் என குமாரசாமியின் கட்சி எதிர்பார்க்கிறது.

பிடிஆர் பதவிக்கு வேட்டு... முட்டுக்கட்டை போடும் அமைச்சர்... அமைச்சரவை மாற்றம் எப்போது?

click me!