
நீதித்துறையின் நலனுக்காகவும், நீதியின் நலனுக்காகவுமே 4 நீதிபதிகளும் கூட்டாக பேட்டி அளித்தோம்.எங்கள் செயல்பாட்டின் மூலம் உச்ச நீதிமன்ற நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்படும் என நம்புகிறேன் என உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்தார்.
பரபரப்பு பேட்டி
உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகாய், எம்.பி. லோகூர், குரியன்ஜோசப் ஆகியோர் வரலாற்றிலேயே முதல் முறையாக, இதுவரை இல்லாத நிகழ்வாக நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு பரபரப்பு பேட்டி அளித்தனர்.
குற்றச்சாட்டு
அதில், உச்ச நீதிமன்றத்தில் நிர்வாகம் சரியில்லை, வழக்குகள் பாரபட்சமாக பிரித்து கொடுக்கப்படுகிறது, நீதித்துறையை காப்பாற்றாவிட்டால், நாட்டில் ஜனநாயகம் நீடிக்காது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
அவசர ஆலோசனை
தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் குற்றச்சாட்டு கூறுவதும் வரலாற்றில் இது முதல்முறையாக இருந்தது. இந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துடன், பிரதமர் மோடி அவசரமாக ஆலோசனை நடத்தினார்.
பேட்டி
இந்நிலையில், மூத்த நீதிபதி குரியன் ஜோசப் தனது சொந்த மாநிலமாக கேரளாவுக்கு நேற்று வந்தார். அப்போது, கொச்சின் நகரில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
வெளிப்படைத்தன்மை
நாங்கள் 4 நீதிபதிகளும் நேற்று அளித்த பேட்டியின் மூலம் உச்ச நீதிமன்ற நீதித்துறை நிர்வாகத்தில் இனி வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும் என நம்புகிறோம். நாங்கள் எழுப்பிய விவகாரங்கள் தீர்வு காணப்படும் என நம்புகிறேன்.
நலனுக்காவே
நாங்கள் நால்வரும் ஊடகங்கள் மத்தியில் பேசியது என்பது, நீதித்துறையின், நீதியின்நலனுக்காத்தான். அதற்காகவே நாங்கள் முன்எப்போதும் இல்லாத நடவடிக்கையை எடுத்தோம். எங்களின் செயல்பாடுகள் என்பது எந்த விதத்திலும் ஒழுக்கத்தை மீறியதல்ல.
நம்பிக்கை அதிகரிக்கும்
நீதித்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரும் என நம்புகிறோம். நீதித்துறைக்காகவும், நீதிக்காகவும் தொடர்ந்து குரல் கொடுக்கோம், ஆதரவாக இருப்போம், அதைத்தான் நாங்கள் செய்தோம். இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை ேமலும் அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.