பார்வையற்ற நபருக்கு ஓடோடி உதவிய கேரள பெண்..! ஜாய் ஆலுக்காஸ் அளித்த இன்ப அதிர்ச்சி

By karthikeyan VFirst Published Jul 17, 2020, 9:45 PM IST
Highlights

கேரளாவில் பார்வையற்ற நபருக்கு பேருந்தை பிடித்து கொடுத்து உதவிய சுப்ரியா என்ற பெண்ணுக்கு ஜாய் ஆலுக்காஸ் சர்ப்ரைஸாக ஒரு பரிசு கொடுத்து மகிழ்வித்துள்ளார்.
 

கேரளாவில் பார்வையற்ற நபருக்கு பேருந்தை பிடித்து கொடுத்து உதவிய சுப்ரியா என்ற பெண்ணுக்கு ஜாய் ஆலுக்காஸ் சர்ப்ரைஸாக ஒரு பரிசு கொடுத்து மகிழ்வித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவல்லாவில் ஜாய் ஆலுக்காஸ் துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றிவருகிறார் சுப்ரியா. கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவருகிறார். கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் நிலையில், சுப்ரியா திருவல்லாவில் உள்ள துணிக்கடையில் பணியாற்றிவருகிறார்.

இவர் வழக்கம்போல பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, பார்வையற்ற நபர் ஒருவர், பேருந்துக்காக காத்திருந்தார். அவருக்கு சரியான பேருந்தை கண்டுபிடிக்க முடியாத நிலையில், அவரிடம் விசாரித்து, அவர் போக வேண்டிய ஊருக்கு பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக சுப்ரியா அழைத்து வந்தார். அப்போது, அந்த பார்வையற்ற நபர் செல்ல வேண்டிய ஊருக்கான பேருந்து வந்ததும், அந்த பேருந்தின் பின்னால் கத்திக்கொண்டே ஓடி, ஒருவழியாக பேருந்தை நிறுத்தினார். பின்னர் நடத்துநரிடம் விவரத்தை கூறி பேருந்தை நிற்கவைத்துவிட்டு, மீண்டும் அந்த பார்வையற்ற நபரிடம் ஓடிச்சென்று, அவரை அழைத்துவந்து பேருந்தில் ஏற்றிவிட்டார் சுப்ரியா. 

இந்த சம்பவத்தை அப்பகுதிவாசி ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டதையடுத்து, அந்த வீடியோ செம வைரலானது. அனைத்து தரப்பினரும் சுப்ரியாவை பாராட்டினர். சுப்ரியா பணிபுரியும் ஆலுக்காஸ் குழும நிறுவனரும் உரிமையாளருமான ஜாய் ஆலுக்காஸ், சுப்ரியாவின் வீட்டுக்கே நேரில் சென்று பாராட்டினார். 

அதன்பின்னர், திரிச்சூரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் தலைமை அலுவலகத்திற்கு வருமாறு சுப்ரியாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு சென்ற சுப்ரியாவிற்கு செம சர்ப்ரைஸ் காத்திருந்தது. சுப்ரியாவிற்கு அனைவரும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். அதன்பின்னர் தான் சுப்ரியாவிற்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. 

ஆம்.. சுப்ரியாவின் செயலை பாராட்டி, அவருக்கு வீடு ஒன்றை பரிசாக அளித்தார் ஜாய் ஆலுக்காஸ். இதை சற்றும் எதிர்பார்த்திராத சுப்ரியா, நெகிழ்ச்சியடைந்தார். சுப்ரியா வாடகை வீட்டில் வசிப்பதை பார்த்த ஜாய் ஆலுக்காஸ், அந்த பெண்ணின் மனிதாபிமானத்தையும் நல்ல மனதையும் பாராட்டி வீடு ஒன்றை பரிசாக அளித்தார். 
 

click me!