
பெண் பாஜக எம்.எல்.ஏ ஒருவர் வந்து சென்றதால் தீட்டு எனக்கூறி கோயிலை கங்கை நீரால் சுத்தம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள ராத் தொகுதியில் மனிஷா அனுராகி என்ற பெண் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். முத்குரா குட் என்ற கிராமத்தில் கோயில் ஒன்று உள்ளது.
மகாபாரத காலம்தொட்டு இந்தக் கோயில் இருந்து வருவதாக அந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர். அது மிகவும் சக்தி வாய்ந்த கோயில் என்றும், அங்கு பெண்களுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்படுகிறது. கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என நம்பப்படுகிறது. பெண்கள் வெளியில் நின்று மட்டுமே பிரார்த்தனைகளை மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் கடந்த ஜூலை 12-ம் தேதி முத்குரா குட் என்ற கிராமத்தில் உள்ள கோயிலுக்குள் சென்று வழிப்பட்டார். இதனை அறிந்த கிராம மக்கள் மிகுந்த கோபமடைந்தனர். இதன் பின்னர் கடவுளின் கோபத்தை குறைப்பதற்காக கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து நீரை எடுத்து வந்து கோவிலின் வளாகத்தை சுத்தப்படுத்தினர்.
இதுகுறித்துப் பேசிய கோயில் பூசாரி, மனிஷா நுராகி, கோயிலுக்கு வரும்போது நான் இல்லை. அந்தச் சமயம் நான் இங்கு இருந்திருந்தால் அவரை கோயிலுக்குள் அனுமதித்திருக்க மாட்டேன். இந்தக் கோயிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப் படமாட்டார்கள். அது தெரியாமல் மனிஷா வந்து சென்றதால்தான் கோயிலை சுத்தம்செய்தோம் எனத் தெரிவித்துள்ளார்.
இச்செய்தியை அறிந்த மனிஷா அனுராகி மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் பெண்கள் நுழையக்கூடாது என்பது தனக்கு தெரியாது என்றும் அது தெரிந்திருந்தால் கோவிலுக்குள் நுழைந்திருக்க மாட்டேன் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளார். இது பெண்களை அவமதிக்கும் செயல் எனக் கூறினார்.