
கர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் பா.ஜ.க., அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான சுரங்க நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
கர்நாடகாவைச் சேர்ந்தவர் ஜனார்த்தன ரெட்டி. தொழிலதிபர், அரசியல்வாதி என பன்முகங்கள் கொண்ட இவர்,கடந்த பா.ஜ.க., ஆட்சியில் அம்மாநில அமைச்சராக பதவி வகித்து வந்தார். பின்னர், இவர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், கடந்த ஆண்டுதான் இவர் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், இவர் சில தினங்களுக்கு முன்பு,தனது மகளுக்கு பெங்களூரில் 650 கோடி ரூபாய் செலவில் ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினர். நாடு முழுதும் பணத்தட்டுப்பாடு உள்ள நிலையில்,இத்திருமணம் நடந்தது குறித்து வருவாய் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான கர்நாடகா, ஒபுலாபுரத்தில் உள்ள சுரங்க நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிடைத்த ஆவணங்கள் பற்றி இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இதில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.