
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை உத்தரவை பெற்றுள்ளது பீட்டா அமைப்பு. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா அமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் காளைகளை எங்கள் குழந்தைகளை போல வளர்த்து வருகிறோம் அது எங்கள் குடும்ப உறுப்பினர் போன்றது. காளையுடன் நாங்கள் விளையாடுவது தான் ஜல்லிக்கட்டு இது எங்கள் கலாச்சாரம், பாரம்பரியம் இதில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என ஜல்லிகட்டு ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
இந்த ஆண்டு தடையையும் மீறி நாங்கள் எங்கள் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நாங்கள் நடத்தியே தீருவோம் என இளைஞர்கள் கூறி பல இடங்களில் தடையை மீறி நடத்தப்பட்டு வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அனைத்து கட்சியினரும், சமூக அமைப்பினரும், கல்லூரி மாணவ, மாணவிகளும் ஆர்ப்பாட்டம் போராட்டம், சாலை மறியல், ரயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
சமீபத்தில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்க முடியாது என கூறியது. இதனால், தமிழக மக்கள் கொதித்து எழுந்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சியினர், அமைப்பினர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதனால் பலர் கைது செய்யப்பட்டனர். சில இடங்களில், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடியும் நடத்தினர். இதனால், ஜல்லிக்கட்டு மீது பொதுமக்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. இன்று தடையை மீறி தூத்துக்குடி ,சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தியதால் போலீசார் பலரை கைது செய்தனர்.
ஆந்திராவில் நேற்று சங்காராந்தி பண்டிகையில் சேவல் சண்டை நடத்தப்படுவது வழக்கம் சேவல் சண்டைக்கு ஆந்திர உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தடை விதித்தது. ஆனால் தடையை பொருட்படுத்தாமல் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள எலுரில் நடைபெற்ற சங்கராந்தி விழாவில் சேவல் சண்டை நடத்தப்பட்டது. ஆளும் தெலுங்கு சேதம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகந்தி வெங்கடேஸ்வரா ராவ் கலந்து கொண்டு சேவல் சண்டையை தொடங்கி வைத்தார்.இதில் 500 கோடிக்கு மேல் பந்தயம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே நானமங்கலம் கிராமத்தில் தடையை மீறி சேவல் சண்டை நடைபெற்றது. 100க்கும் மேற்பட்டோர் இணைந்து 50க்கும் அதிகமான சேவல்கள் வைத்து சேவல் சண்டை போட்டி நடத்தினர். ஆர்.கே பேட்டையில் சேவல் சண்டை நடத்த முயன்ற போது போலீசார் வந்து தடை செய்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உச்சநீதிமன்ற தடையை பொருட்படுத்தாமல் அங்குள்ள இளைஞர்கள் மாடுகளுடன் தீயில் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதராகவும், பீட்டாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.திரையுலகத்தைச் சேர்ந்த நடிகர்கள் கமல், ரஜினி, சிம்பு,விஜய் இயக்குநர்கள் பாரதிராஜா,அமீர்,ராம்,கவுதமன் இளையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.