
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி புதுச்சேரியில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டியை உடனடியாக நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி போராளிகள் குழு மற்றும் தமிழ் அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இதனை ஏற்று இன்று காலை 6 மணி முதல் முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி, அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழு அடைப்பு போராட்டம் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்கவில்லை. அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில தமிழக பேருந்துகள் மட்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டு வருகிறது.