
ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் இளைஞர்கள் நடத்திய போராட்டம் வெற்றியைக் கொடுத்ததைத் தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜல்லிக்கட்டுக்குப் போட்டியில் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன என பீட்டாஉள்ளிட்ட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு தடைவித்தது. அதைத்தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டுப்போட்டி நடக்கவில்லை. ஆனால், இந்த ஆண்டு மாணவர்கள், இளைஞர்களின் தன்எழுச்சி, அறவழிப்போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு அவசரச்சட்டத்தை இயற்றி, தமிழக அரசு போட்டியை நடத்தியது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுப்போட்டிக்கு நடத்த இளைஞர்கள் மேற்கொண்ட போராட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாஹாராஷ்டிரா மாநிலத்தில் சேனாகட்சியின் போர்க்குரல் எழுப்பியுள்ளது. அங்கு மாட்டுவண்டிப்பந்தயம் நடக்க விதிக்கப்பட்ட தடையை நீக்ககோரி, மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சிவசேனா கட்சியின் மூத்ததலைவரும், ஷிரூர் தொகுதி எம்.பி.யுமான சிவாஜிராவ்அதால்ராவ் நிருபர்களிடம் கூறுகையில், “ தமிழகத்தை பார்த்தால், அங்குள்ள முதல்வர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த நிர்வாகமும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். பிரதமர் மோடியைக்கூட ஜல்லிக்கட்டுக்காக தமிழக முதல்வர் சந்தித்தார்.
தமிழகத்தைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸும் பிரதமர் மோடியைச் சந்தித்து, மாட்டுவண்டிப்பந்தயம் நடத்த அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும்.
இந்த போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சக்கான் நகரில் ஏராளமான விவசாயிகள், காளைமாடுகளின் உரிமையாளர்கள் போராட்டம்நடத்தினர். இந்த தடையை நீக்கக் கோரி சட்டப்போராட்டம் தொடர்ந்தாலும், முதல்வர் தலையிட்டு, பிரதமரைச் சந்தித்து அவசரச்சட்டம் கொண்டு வர வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.