தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7ஆவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மக்களவைத் தேர்தலோடு சேர்த்து ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
முன்னதாக, மக்களவை தேர்தலின் அனைத்து கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து, பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. பல ஊடக நிறுவனங்கள் தங்களது கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்தியா கூட்டணி 145 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கணித்துள்ளன.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் நம்பிக்கை இல்லை: துரை வைகோ!
இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு மோடியின் கற்பனை கருத்துக்கணிப்பு என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், “இது கருத்துக்கணிப்பு அல்ல. மோடி ஊடகத்தின் கணிப்பு. அவரது கற்பனை கருத்துக்கணிப்பு. இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்.” என்றார்.
அதேபோல், “ஜூன் 4ஆம் தேதி வெளியேறப்போவது உறுதி என தெரிந்ததும் மக்களை திசை திருப்ப மோடி இறுதியாக திட்டமிட்டது தான் இந்த கருத்துக்கணிப்புகள். இந்தியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் பெறும் என்பது தெளிவான தீர்க்கமான ஒன்று. கருத்து திணிப்புகள் மூலம் உளவியல் விளையாட்டுகளை நடத்துகிறார் மோடி. ஆனால் உண்மையான முடிவுகள் மிகவும் வித்தியாசமாக இருக்கும்.” என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு விவாதத்தை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கருத்துக் கணிப்பு விவாதங்களில் பங்கேற்க அக்கட்சி முடிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.