செயற்கைக்கோளில் பிரதமர் மோடி படம்... பகவத் கீதை வாசகத்துடன் விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி 51...!

By Kanimozhi PannerselvamFirst Published Feb 28, 2021, 3:38 PM IST
Highlights

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 10.24 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட், 19 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் 'அமேசோனியா - 1' செயற்கைக் கோள் ஏவப்பட்டது. 637 கிலோ எடையுள்ள அமேசோனியா செயற்கைக்கோள் 4 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது. 

அத்துடன்  இஸ்ரோ தயாரித்த சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதிஷ் சாட்,  சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோவை சக்தி தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி51 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அமெரிக்காவின் 13 நானோ செயற்கை கோள்களும் அடங்கும். 

அத்துடன் சதீஷ் தவான் சேட் செயற்கைக்கோளில் பிரதமர் மோடியின் படமும், பகவத் கீதையின் வாசகம் ஒன்று இடம் பெற்றுள்ளது.  பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட 19 செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், “பி.எஸ்.எல்.வி சி-51 அமேசானியா -1 ஐ முதன்முறையாக வணிகரீதியில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ மற்றும் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டுக்கும் எனது வாழ்த்துக்கள். இது நாட்டில் விண்வெளி சீர்திருத்தங்களின் புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. 18 சக செயற்கைக் கோள்களுடன் நான்கு சிறிய செயற்கைக்கோள்களும் இருந்தன, அவை நம் இளைஞர்களின் சுறுசுறுப்பையும், புதுமையையும் வெளிப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளார். 

மற்றொரு பதிவில் பிரேசில் அதிபருக்கு வாழ்த்து தெரிவித்து, “பி.எஸ்.எல்.வி-சி 51 பிரேசிலின் அமேசானியா -1 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்கு ஜனாதிபதி போல்சனாரோவுக்கு வாழ்த்துக்கள். இது எங்கள் விண்வெளி ஒத்துழைப்பின் ஒரு வரலாற்று தருணம் மற்றும் பிரேசில் விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

click me!