
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ISRO, அமெரிக்காவின் AST SpaceMobile நிறுவனத்திற்கு சொந்தமான BlueBird Block 2 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை இன்று (புதன்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ஏவுதல், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையம்-இல் இருந்து இந்திய நேரப்படி காலை 8:55 மணிக்கு நடைபெற்றது. செயற்கைக்கோள் திட்டமிட்ட தாழ்வட்டப் பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், உலகம் முழுவதும் உள்ள சாதாரண ஸ்மார்ட்போன்களுக்கு நேரடியாக அதிவேக செல்லுலார் பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை நடைமுறைப்படுத்துவதாகவும். குறிப்பாக, தொலைதூர மற்றும் தொடர்பு வசதி குறைந்த பகுதிகளில் இணைய அணுகலை மேம்படுத்தும் திறன் உள்ளது.
இந்த ஏவுதலில் பயன்படுத்தப்பட்ட LVM3 ராக்கெட்டின் வரலாற்றில், தாழ்வட்டப் பாதைக்கு ஏவப்பட்ட மிக கனமான பேலோடாக ப்ளூபேர்ட் பிளாக்-2 பதிவாகியுள்ளது. இதன் மூலம், இஸ்ரோவின் கனரக ஏவுகணை திறன் உலகளவில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
LVM3-M6 / ப்ளூபேர்ட் பிளாக்-2 என்பது முழுக்க முழுக்க வர்த்தக ரீதியில் செய்யப்பட்டது ஒரு சிறப்பு திட்டமாகும். இது LVM3 ஏவுகணையின் ஆறாவது செயல்பாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம், இந்தியாவின் விண்வெளி வர்த்தக சந்தைக்கு புதிய நம்பிக்கையை அளிக்கிறது.
இந்தப் பயணத்தின் மூலம், ப்ளூபேர்ட் பிளாக்-2 தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும் மிகப்பெரிய வர்த்தக தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக உருவெடுத்துள்ளது. அதே நேரத்தில், இந்திய மண்ணிலிருந்து ஏவப்பட்ட மிக கனமான பேலோடாகவும் இது சாதனை படைத்துள்ளது.
இஸ்ரோ உருவாக்கிய LVM3, மூன்று நிலைகள் கொண்ட ஏவுகணை வாகனம் ஆகும். இதில் இரண்டு S200 திட எரிபொருள் மோட்டார்கள், L110 திரவ கோர் ஸ்டேஜ் மற்றும் C25 கிரையோஜெனிக் மேல் நிலை ஆகியவை இடம்பெற்றுள்ளன. சுமார் 640 டன் எடையும், 43.5 மீட்டர் உயரமும் கொண்ட இந்த ராக்கெட், GTO பாதைக்கு 4,200 கிலோ வரை பேலோடை சுமக்கும் திறன் பெற்றது.
முன்னதாக, LVM3 ராக்கெட் சந்திரயான்-2, சந்திரயான்-3 மற்றும் இரண்டு ஒன்வெப் திட்டங்களில் 72 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. இதன் கடைசி ஏவுதல், இந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற LVM3-M5 / CMS-03 பயணமாகும்.
AST SpaceMobile நிறுவனம் உருவாக்கி வரும் ப்ளூபேர்ட் செயற்கைக்கோள்கள், எந்த கூடுதல் வன்பொருள் மாற்றங்களும் இல்லாமல், சாதாரண 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்கள் நேரடியாக இணைய சேவையை வழங்கும் திறன் கொண்டவை. இதன் மூலம், உலகின் எந்த மூலையிலிருந்தும் வீடியோ அழைப்புகள், இணைய உலாவல் மற்றும் அதிவேக தரவு சேவைகள் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.