
பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டுத் தளத்திற்கும் சந்திரயான்-3 லேண்டருக்கும் இடையேயான தகவல் தொடர்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன் மூலம் தொடர்ந்து லேண்டர் நல்ல நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
தரையிறங்கிய பின் லேண்டர் கேமரா எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டர் கேமரா தொடர்ந்து சிறப்பாக வேலை செய்வதும் உறுதியாகியுள்ளது. நிலவை நெருங்க நெருங்க படங்களை வெளியிட்டு வந்தது போல, இனியும் அடுத்தடுத்த நகர்வுகளின் புகைப்படங்களையும் இஸ்ரோ வெளியிட உள்ளது.
நிலவைத் தொட்ட சந்திரயான்-3! அடுத்து என்ன நடக்கும்? நிலவில் என்னென்ன ஆய்வுகள் செய்யும்?
குறிப்பாக, லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் இறங்கியதும் ரோவர் லேண்டரையும் லேண்டர் ரோவரையும் எடுக்கும் படங்களைப் பார்க்க உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது. அவை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் இன்று மாலை 6:04 மணிக்கு நிலவில் மேற்பரப்பில் வெற்றிகரமாக மென்மையான தரையிறங்கம் செய்துள்ளது. உலகிலேயே இந்த சாதனையை நிகழ்த்திய நான்காவது நாடு என்ற பெருமையையும் வசப்படுத்தியுள்ளது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா நிகழ்த்தியுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் லேண்டர் 'மென்மையான தரையிறக்கத்தை' நிறைவேற்றிய சாதனையைச் செய்த ஒரே நாடு என்ற பெருமையையும் இந்தியா பெற்றுள்ளது. இனி, நிலவின் மேற்பரப்பில் சுற்றிவரும் சிறிய வாகனமான பிரக்யான் ரோவர் லேண்டரில் இருந்து வெளிவரவுள்ளது. இது நடப்பதற்கு சில மணிநேரங்கள் ஆகலாம். இருக்கும் சூழ்நிலையைப் பொறுத்து அதிகபட்சம் ஒரு நாள் கூட ஆகக்கூடும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.