
Tax On Groundwater Used By Farmers?: இந்தியாவில் விவசாயத்துக்கு நிலத்தடி நீர் பயன்பாடு அதிகம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 23,913 கோடி கன மீட்டர் நிலத்தடி நீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது மொத்த நிலத்தடி நீரில் 83% என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கிடையே நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க விவசாய நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு மத்திய அரசு வரி விதிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தன.
விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரியா?
இது தொடர்பாக மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசு புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாகவும் தகவல்கள் கூறின. இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு அரசியல் தலைவர்களும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ''இந்திய முழுவதும் வேளாண்மைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் முறை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக மத்திய அரசின் நீர்வளத்துறை தெரிவித்திருக்கிறது. நிலத்தடி நீரை பயன்படுத்தும் உழவர்கள் அனுபவித்து வரும் துயரங்களையும், நெருக்கடிகளையும் புரிந்து கொள்ளாமல் இப்படி ஒரு திட்டத்தை செயல்படுத்த நீர்வள அமைச்சகம் திட்டமிடுவது கண்டிக்கத்தக்கது.
நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் சொன்னது என்ன?
நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தின்படி, மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் நீர் பயன்பாட்டாளர்கள் அமைப்புகளின் மூலம் நிலத்தடி நீர் மையப்படுத்தப்பட்ட பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். அந்த நீரை அழுத்தத்தை பயன்படுத்தி உழவர்களின் வேளாண் பயன்பாட்டுக்காக அனுப்பும் வசதிகளும் செய்யப்பட்டிருக்கும். அங்கிருந்து உழவர்கள் தங்களுக்குத் தேவையான நிலத்தடி நீரை பெறலாம். எவ்வளவு நீரை உழவர்கள் பெறுகிறார்களோ, அவ்வளவு நீருக்கு வரி விதிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
அடிப்படையிலேயே தவறான திட்டம்
இந்தத் திட்டத்தை சோதனை அடிப்படையில் பல மாநிலங்களில் 22 இடங்களில் செயல்படுத்த இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உழவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து எடுக்கும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படுமா? வரியின் அளவு எவ்வளவாக இருக்கும்? என்பதெல்லாம் தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் தத்துவம் அடிப்படையிலேயே தவறானது ஆகும்.
அன்புமணி ராமதாஸ் சொன்ன யோசனை
நிலத்தடி நீர் வீணாவதைத் தடுக்கும் வகையில் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரும்பாடு பட்டு நிலத்தடி நீரை எடுக்கும் எந்த உழவரும் அதை வீணாக்க மாட்டார்கள். நிலத்தடி நீர் வீணாவதை தடுக்க அரசு நினைத்தால் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நிலத்தடி நீரை சிக்கனமாக பயன்படுத்தும் உழவர்களுக்கு வெகுமதிகளைக் கொடுத்து ஊக்குவிப்பதும் தான் சரியான நடவடிக்கையாக இருக்கும். வரி விதிப்பது சரியானதாக இருக்காது. அது ஏற்கனவே வாடிக்கொண்டிருக்கும் உழவர்களை மேலும் வாட்டும்'' என்று கூறியிருந்தார்.
மத்திய அரசு விளக்கம்
அன்புமணி மட்டுமின்றி டிடிவி தினகரன் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி என்ற உலா வரும் செய்தி உண்மையல்ல என்று மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) உண்மை சரிபார்ப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் நீர் என்பது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் கூறும் வீடியோவை பிஐபி பகிர்ந்து விளக்கம் அளித்துள்ளது.
விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்
மேலும் மத்திய நீர்வளத்துறையும், ''விவசாயிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக தவறான தகவலை வெளியிட வேண்டாம். நீர் மேலாண்மை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் கட்டணம் நிர்ணயிப்பது அவர்களின் முடிவு. நீர் மேலாண்மையை மேம்படுத்துவதற்காக நீர் மேலாண்மை திட்டத்தை கொண்டு வர உள்ளோம்'' என்று விளக்கம் அளித்துள்ளது.