
உலகின் மிகப் பழமையானதும், விமானம் தாங்கி போர்க்கப்பலுமான INS விராட் இன்று ஓய்வு பெறுகிறது.
INS விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல், கடந்த 1959-ஆம் ஆண்டில், 'எச்எம்எஸ் ஹெர்ம்ஸ்' என்ற பெயரில், பிரிட்டன் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
15 ஆண்டுகாலம் அங்கு சேவையாற்றிய அந்த கப்பல் INS விராட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, இந்திய கடற்படையில் கடந்த 1987-ஆம் ஆண்டில் அந்த கப்பல் சேர்க்கப்பட்டது.
465 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து அதை வாங்கிய இந்தியா வெறும் ஐந்து ஆண்டுகாலம் மட்டுமே அதனை உபயோகம் செய்ய நினைத்தது. ஆனால், 30 ஆண்டுகாலம் இந்திய கடற்படையில் INS விராட் விமானம் தாங்கி போர்க்கப்பல் சேவை புரிந்துள்ளது.
இக்கப்பலுக்கு வருகிற 2020-ஆம் ஆண்டில் ஓய்வு கொடுக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால், வயது மூப்பு மற்றும் பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களால், முன்கூட்டியே ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படிஇன்று INS விராட்க்கு ஓய்வளிக்கப்படும் என கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய கடற்படை அறிவித்தது.
தொடர்ந்து, INS விராட்டின் கடைசி பயணம் மும்பையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 23-ம் தேதியன்று துவங்கி நிறைவு பெற்றது.
விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விராட், சுமார் 2,252 நாட்களை அதாவது 80,715 மணி நேரத்தை கடலில் செலவளித்துள்ளது. மேலும், 10,94,215 கடல் மைல் தொலைவுகளை இக் கப்பல் கடந்துள்ளது.