
இண்டிகோ விமான நிறுவனம் அடுத்தடுத்த பிரச்னைகளில் சிக்கி வருவது வாடிக்கையாகிவிட்டது. அதன்படி தற்போது மேலும் ஒரு பிரச்சனையில் சிக்கியுள்ளது. இதற்காக இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் ராஜீவ் கத்யால் என்ற பயணியை இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் ஊழியர்கள் கீழே தள்ளி கழுத்தை நெறித்தனர்.
விமானத்திலிருந்து இறங்கிய ராஜீவ் பேருந்துக்காக காத்திருந்தபோது இண்டிகோ ஊழியர் சற்று தள்ளி நிற்குமாறு கோபமாக கூறியுள்ளார். இதனால் அந்தப் பயணிக்கும் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பயணி செல்வதற்கான பேருந்து வந்தபோது அவரை அதில் ஏறவிடாமல் ஊழியர்கள் தடுத்தனர். இதற்காக இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டது.
இந்நிலையில், இதேபோன்று மற்றொரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதாவது லக்னோ விமான நிலையத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த மாற்றுத்திறனாளி பெண்ணான ஊர்வசி என்பவருக்கு உதவ இண்டிகோ நிறுவன ஊழியர் ஒருவர் வந்துள்ளார்.
அவர், ஊர்வசியின் சக்கர நாற்காலியை வேகமாக இழுத்து, சக்கர நாற்காலி செல்வதற்கான பாதையில் தள்ளியபோது நிலை தடுமாறிய ஊர்வசி, சக்கர நாற்காலியில் இருந்து கீழே விழுந்தார்.
காயமடைந்த ஊர்வசி உடனடியாக விமான நிலைய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
இதையடுத்து இண்டிகோ நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் தங்கள் நிறுவன ஊழியர்கள் இனி நிதானமாக நடக்க அறிவுறுத்துவதாகவும், இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.