
நாம வாழுறதுக்காக வேலை பார்க்குறோமா, இல்ல வேலை பார்க்குறதுக்காகவே வாழுறோமா? நம்மில் பலரும் இந்த கேள்வியை நமக்கு நாமே பலமுறை கேட்டிருப்போம். இந்தியாவின் வேலை கலாச்சாரத்தில் 'வொர்க்-லைஃப் பேலன்ஸ்' என்ற வார்த்தைக்கே இடமில்லை என்பது போன்ற சூழல்தான் பெரும்பாலும் நிலவுகிறது. இதை மையமாக வைத்து பகிரப்பட்ட ஒரு போஸ்ட்தான் இப்போது சோஷியல் மீடியாவில் கவனம் ஈர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவின் அமைதியான மாலை நேரங்களையும், இந்தியாவின் முடிவில்லாத வேலைப் பளுவையும் ஒப்பிட்டு இந்த பதிவு எழுதப்பட்டுள்ளது. மனுராஜ் கார்க் என்ற இளைஞர் LinkedIn தளத்தில் இதை ஷேர் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள தனது நண்பரை போனில் அழைத்த அனுபவத்தையும் மனுராஜ் பகிர்ந்துள்ளார். மாலை 4:30 மணிக்கு, அவரது நண்பர் ஒரு கஃபேவில் தனியாக காபி குடித்துக் கொண்டிருந்தாராம். லேப்டாப், மீட்டிங், ஏர்பாட்ஸ் என எதுவும் இல்லாமல், முழுமையான ஓய்வில் இருந்திருக்கிறார். அன்றைய வேலை முடிந்ததும், அவர் சைக்கிளிங், கோல்ஃப் அல்லது தன் மனைவியுடன் கடற்கரையில் நடைப்பயிற்சி என எதற்காவது சென்றுவிடுவார். இரவு 10 மணிக்கு தூக்கம். அங்குள்ள வாழ்க்கை முறை மிகவும் அமைதியானது என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இந்தியாவில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது என்கிறார் மனுராஜ். இங்கே இரவு 8:30 மணி ஆனாலும் ஆஃபீஸ் லைட்கள் அணைக்கப்படுவதில்லை. இல்லையென்றால், டிராஃபிக்கில் சிக்கி நீண்ட வரிசையில் கார்கள் நிற்கும். டிரைவிங் செய்யும்போதே வாட்ஸ்அப் பார்த்துவிட்டு, 'ரெண்டே நிமிஷத்துல ஜாயின் பண்றேன்' என்று சொல்லும் அளவுக்கு பிஸியாக இருக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை இரவு கூட, அடுத்த நாள் ரிவ்யூ மீட்டிங்கிற்காக லேப்டாப்பை திறக்க வேண்டியுள்ளது.
'மற்றொருவர் தன்னை விட வேகமாக வளர்ந்துவிடுவாரோ' என்ற பயம்தான் இந்தியர்களை இந்தக் கடுமையான போட்டிக்குத் தள்ளுகிறது என்பது மனுராஜின் கருத்து. 'ஆஸ்திரேலியாவில் வேலை என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி, ஆனால் இந்தியாவில், வேலைக்கு நடுவே கிடைக்கும் இடைவெளியில் தான் வாழ்க்கையே ஓடுகிறது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவிற்கு பலரும் கமெண்ட் செய்துள்ளனர். மனுராஜ் சொன்னது முற்றிலும் உண்மை என்று பலரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.