LPG Rules: மாசம் 2 சிலிண்டர்தான்! கேஸ் புக்கிங் விதிகளை மாற்றிய BPCL - உங்களுக்கு என்ன பாதிப்பு?

Published : Mar 25, 2026, 12:05 PM IST
LPG Rules: மாசம் 2 சிலிண்டர்தான்! கேஸ் புக்கிங் விதிகளை மாற்றிய BPCL - உங்களுக்கு என்ன பாதிப்பு?

சுருக்கம்

பாரத் பெட்ரோலியம் (BPCL) நிறுவனம் LPG சிலிண்டர் புக்கிங் விதிகளை மாற்றியுள்ளது. இனி ஒரு வாடிக்கையாளர் மாதத்திற்கு 2 சிலிண்டர்களும், வருடத்திற்கு 15 சிலிண்டர்களும் மட்டுமே புக் செய்ய முடியும். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மட்டுமே புக்கிங் செய்ய வேண்டும், டெலிவரிக்கு OTP கட்டாயம்.

நீங்க பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தின் LPG வாடிக்கையாளராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. சிலிண்டர் புக்கிங் மற்றும் டெலிவரி தொடர்பாக சில பெரிய மாற்றங்களை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். கேஸ் சிலிண்டர் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்கவும், விநியோக முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வரவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மாதத்திற்கு 2 சிலிண்டர்கள் மட்டுமே

புதிய விதிமுறையின்படி, இனி ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக இரண்டு LPG சிலிண்டர்களை மட்டுமே புக் செய்ய முடியும். இதன் மூலம் தேவையில்லாமல் செய்யப்படும் கூடுதல் புக்கிங்குகள் தடுக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து மட்டுமே புக்கிங்

இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய, நீங்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை மாற்றியிருந்தால், உடனடியாக உங்கள் கேஸ் ஏஜென்சி அல்லது அதிகாரப்பூர்வ மொபைல் செயலியில் அதை அப்டேட் செய்யவும்.

டெலிவரிக்கு OTP கட்டாயம்

டெலிவரி ஊழியர் உங்கள் வீட்டிற்கு சிலிண்டருடன் வரும்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு டெலிவரி அங்கீகாரக் குறியீடு (DAC), அதாவது OTP வரும். அந்த OTP-ஐ அவரிடம் தெரிவித்த பிறகே உங்களுக்கு சிலிண்டர் வழங்கப்படும். இது கிட்டத்தட்ட ரேஷன் கடைகளில் பொருள் வாங்க OTP சொல்வது போல தான்.

கூடுதல் சிலிண்டர் தேவைப்பட்டால் என்ன செய்வது?

வீட்டில் திருமணம், விழா அல்லது விருந்தினர்கள் வருகை போன்ற காரணங்களுக்காக உங்களுக்கு கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்பட்டால், "Hello BPCL" மொபைல் செயலி மூலம் நீங்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அதற்கான காரணத்தையும் நீங்கள் தெரிவிக்க வேண்டியிருக்கும்.

மானிய சிலிண்டர்களுக்கான விதி

அரசு வழக்கம் போல் ஒரு நிதியாண்டில் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) 12 மானிய விலையுள்ள LPG சிலிண்டர்களை தொடர்ந்து வழங்கும். ஒரு வாடிக்கையாளர் இந்த 12 சிலிண்டர்களையும் பயன்படுத்திவிட்டு, அவருக்கு மேலும் சிலிண்டர் தேவைப்பட்டால், அது குறித்த தகவலை செயலியில் தெரிவிக்க வேண்டும்.

நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களுக்கான புதிய புக்கிங் விதிகள்

நகர்ப்புறங்கள்

  • 14.2 கிலோ சிலிண்டரை ஒருமுறை புக் செய்த பிறகு, அடுத்த புக்கிங் செய்ய குறைந்தபட்சம் 35 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
  • முன்பு இந்த இடைவெளி 25 நாட்களாக இருந்தது, தற்போது அது அதிகரிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்கள்

  • கிராமங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் இரண்டு புக்கிங்குகளுக்கு இடையே 45 நாட்கள் காத்திருப்பு காலம் (lock-in period) இருக்கும்.
  • பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PMUY) பயனாளர்களுக்கும் இந்த 45 நாட்கள் காத்திருப்பு காலம் பொருந்தும்.

ஆண்டு மற்றும் மாத புக்கிங் வரம்பு

  • ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 2 சிலிண்டர்கள் புக் செய்யலாம்.
  • ஒரு வருடத்தில் (ஏப்ரல் 1 - மார்ச் 31) மொத்தம் 15 சிலிண்டர்கள் புக் செய்யலாம்.
  • இதில் 12 மானிய விலை சிலிண்டர்களும், 3 மானியமில்லாத சிலிண்டர்களும் அடங்கும்.

மற்ற அளவு சிலிண்டர்களுக்கான புக்கிங் இடைவெளி

  • 5 கிலோ சிலிண்டர்: 9 முதல் 16 நாட்கள் இடைவெளி
  • 10 கிலோ சிலிண்டர்: 18 முதல் 32 நாட்கள் இடைவெளி

இந்த புதிய விதிகள் மூலம், கேஸ் விநியோக முறை முன்பை விட சிறப்பாகவும் வெளிப்படையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வாடிக்கையாளர்கள் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, உங்கள் மொபைல் எண்ணை அப்டேட் செய்து வைப்பதும், OTP முறையை சரியாகப் பின்பற்றுவதும் அவசியம். எந்தவித சிரமத்தையும் தவிர்க்க, உங்கள் தேவையை கருத்தில் கொண்டு முன்கூட்டியே சிலிண்டரை புக் செய்யுமாறு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்று முதல் குடிக்க முடியாது.. 2 நாட்களுக்கு மது விற்பனை முழு தடை.. எங்கு தெரியுமா?
West Asia Crisis: மேற்கு ஆசியாவில் போர் பதற்றம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு