இந்தியாவின் ஜவுளி சந்தை வளர்ச்சியடைந்து வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கியுள்ள பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சி வருகிற 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 11 ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் 65 க்கும் மேற்பட்ட அறிவுசார் அமர்வுகள் இடம்பெறவுள்ளன. 100 க்கும் மேற்பட்ட உலகளாவிய குழு உறுப்பினர்கள் இந்தத் துறை தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
பாரத் டெக்ஸ் 2024ஐ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, ஜவுளித் துறையில் நிலையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தமது அரசாங்கத்தின் முயற்சிகளின் விளைவாக நேர்மறை தாக்கங்கள் நன்றாகவே காணப்படுவதாக தெரிவித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டில், இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது, இன்று, 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தி 25% உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது எனவும் அவர் கூறினார்.
ஜவுளித் துறையில் திறமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்த பிரதமர், நாடு முழுவதும் 19 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி (NIFT) கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அருகிலுள்ள நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களும் இந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “இன்று, உலகிலேயே பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இப்பணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று அரசாங்கம் இலட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளை ஆதரித்து, அவர்களிடமிருந்து இலட்சக்கணக்கான குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்கிறது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கஸ்தூரி பருத்தி இந்தியாவின் சொந்த அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளில் முக்கியமானதாக இருக்கும்.” என்றார்.
அண்ணாமலை வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
பிரதமரின் 5எஃப் தொலைநோக்குப் பார்வையைக் குறிக்கும் வகையில் ஃபைபர், ஃபேப்ரிக் ,ஃபேஷன் ,ஃபோகஸ் ஆகியவற்றின் மூலம் ஒட்டுமொத்த ஜவுளி மதிப்பு சங்கிலியையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டமைப்பை பாரத் டெக்ஸ் 2024 உருவாக்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரத் டெக்ஸ் 2024 இல் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரிகள், 3,500 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட வாங்குபவர்கள் மற்றும் ஜவுளி மாணவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்கள் தவிர 40,000 க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டின் போது 50-க்கும் மேற்பட்ட அறிவிப்புகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஜவுளித் துறையில் முதலீடு மற்றும் வர்த்தகத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.