
ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் கொன்று குவிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமைபட கூறியுள்ளார்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினரை தீவிரவாதிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். அவர்களை எதிர்கொள்வதற்கு காஷ்மீர் போலீசார், துணை ராணுவத்தினர் மற்றும் ராணுவத்தினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காஷ்மீரில் தீவிரவாத அச்சுறுத்தல் என்பது பாதுகாப்பு படைக்கு மிகப்பெரும் சவாலாக உள்ளது. இதேபோன்று சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில், சீன ராணுவம் சாலை அமைக்க முயன்றது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தியது.
தூதரக முயற்சி
இந்தியாவின் உறுதியான நடவடிக்கை மற்றும் தூதரக முயற்சியால் டோக்லாம் பகுதியில் அமைதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-
கடும் பதிலடி
பாகிஸ்தான் வீரர்களை இந்திய வீரர்கள் அத்து மீறி ஒருபோதும் தாக்கியது இல்லை. ஆனால் அவர்கள் தாக்கும்போது இந்திய ராணுவம் மிக கடுமையான பதிலடியை கொடுத்து வருகிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 5 தீவிரவாதிகளையாவது இந்திய வீரர்கள் கொன்று குவித்து வருகின்றனர். இந்தியா ஒரு பலவீனமான நாடு அல்ல.
பலமான நாடு
டோக்லாம் பகுதியில் சீனாவின் பலத்தை எதிர்கொண்டு அங்கு இந்தியா அமைதியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பலவீனமான நாட்டால் சீனாவை எதிர்கொள்ள முடியாது என்பதை உணர வேண்டும். டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே சண்டை ஏற்படும் என்றுதால் பல்வேறு நாடுகள் எதிர்பார்த்தன. ஆனால் அதற்கு மாற்றமாக நடந்து விட்டது. இந்தியா ஒரு வலிமையான நாடு. இவ்வாறு அவர் பேசினார்.