பெண் ரயில் ஓட்டுநர்கள் தங்களது பணிப் பிரிவை மாற்றுவதற்கான ஒரு முறை விருப்பத்தை வழங்குவது குறித்து இந்திய ரயில்வே ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பெண் ஓட்டுநர்கள் மற்றும் டிராக் பராமரிப்பாளர்களுக்கு அவர்களின் விருப்பத்திற்கேற்ப பணிப் பிரிவை மாற்றுவதற்கான ஒரு முறை விருப்பத்தை வழங்குவது குறித்து இந்திய ரயில்வே ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, ரயில்வேயில் லோகோ பைலட்கள் மற்றும் உதவி லோகோ பைலட்டுகள் என மொத்தம் 65,000 லோகோ பைலட்டுகளில் 1,350 பெண்கள் உள்ளனர். பெரும்பாலான பெண் லோகோ பைலட்டுகள் மற்றும் மகளிர் டிராக் பராமரிப்பாளர்கள் பாதுகாப்பற்ற பணி சவால்களால் தங்கள் பணி வகையை மாற்ற விரும்புகின்றனர் என மூத்த ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பணி மாறுதல் பிரிவில் எத்தனை வருடங்களாக எத்தனை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன என்பதை ரயில்வே கணக்கிட்டு வருவதாக இதுகுறித்த தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய ரயில்வே மேன்களின் தேசிய கூட்டமைப்பு, பெண்கள் டிராக் பராமரிப்பாளர்கள் மற்றும் இயங்கும் ஊழியர்களுக்கு அவர்களின் பணி வகையை மாற்றுவதற்கு ஒரு முறை விருப்பத்தை வழங்குவதற்கான கோரிக்கையைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.
புதிய தோற்றத்தில் ஏர் இந்தியா விமானம்! லோகா, டிசைன் எல்லாமே புதுசு!
“இந்த விவகாரம் பரிசீலனையில் உள்ளது. மேலும், பெண் பாதை பராமரிப்பாளர்கள் மற்றும் ALP களின் எண்ணிக்கையை வழங்க மண்டல ரயில்வேயிடம் கேட்கப்பட்டுள்ளது. பெண் பாதை பராமரிப்பாளர்கள் மற்றும் பெண் ஓட்டுநர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை மாற்றுவதற்கான நிலுவையில் உள்ள கோரிக்கைகளின் எண்ணிக்கையையும் வழங்குமாறு கேட்டுகப்பட்டுள்ளது.” என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெண்களுக்கு ஒரு முறை வேலை மாற்றத்தை வழங்குவதற்குப் பதிலாக, இதுபோன்ற வேலைகளில் பெண்களுக்கு அதிக வசதிகளை இந்திய ரயில்வே வழங்க வேண்டும் என்று பல பெண் ஊழியர்கள் கூறியுள்ளனர்.