இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் ஹெலிகாப்டர் மூலம் பயிற்சி மேற்கொண்டபோது, அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. ராணுவ உயர் அதிகாரி வந்த இந்த ஹெலிகாப்டர் ஆனது விபத்தில் சிக்கி இருக்கிறது. சூலூர் விமானப்படை மைதானத்தில் இருந்து வெலிங்டன் சென்ற போது ஹெலிகாப்படர் விபத்தில் சிக்கியுள்ளது.
undefined
விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. அந்த ராணுவ ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவர் மனைவி உட்பட மொத்தம் 14 பேர் பயணித்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து இந்திய படைத்தளபதி பிபின் ராவத் பயணம் செய்துள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம் தற்போது வெளிவந்து இருக்கிறது. பிபின் ராவத், மதுலிகா ராவத் , ஜிதேந்திர குமார்,ஹர்ஜிந்தர் சிங்,சாய் தேஜா,விவேக் குமார்,குருசேவாக் சிங்,எல்.எஸ்.லிடர்,ஹாவ் சாட்பால் ஆகியோர் ஆவார்கள்.
இந்த விபத்தில் சிக்கிய எம்.ஐ.17வி5 ரக ஹெலிகாப்டர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டது ஆகும். ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 2 உடல்கள் 80% எரிந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டன. சில உடல்கள் விபத்துநடந்த பகுதியிலுள்ள மலைச்சரிவின் கீழே விழுந்துள்ளன என்று தகவல்கள் எழுந்து இருக்கின்றன.
இந்த விபத்து தொடர்பாக மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டிருக்கிறது. மேலும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் விளக்கமளித்துக் கொண்டிருப்பதாகவும், அதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங் குன்னூருக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த விபத்து தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுடன் தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கேட்டறிந்து இருக்கிறார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பயணித்தவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புகிறோம்; விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.