அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் இந்திய ராணுவம்: அக்னிவீரர்களுக்கான பரிந்துரைகள்!

By Manikanda Prabu  |  First Published Jun 9, 2024, 11:43 AM IST

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமைந்துள்ள கூட்டணி கட்சிகளின் கவலையையடுத்து, அக்னிபாத் திட்டம் குறித்து இந்திய ராணுவம் பரிசீலனை செய்யவுள்ளது


இந்திய ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கு அக்னிபத் எனும் புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்றுவார்கள்.

மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு எதிராக போராட்டங்களும் நடந்துள்ளன. குறிப்பாக, பீகார் மாநிலத்தில் அக்னிபாத் திட்டம் கடும் எதிர்ப்புக்குள்ளானது. இந்த நிலையில், அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய ஐக்கிய ஜனதாதளம் கட்சி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகளில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சியே மத்தியில் அமையவுள்ளது. இதனால், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு முக்கியத்துவம் ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இந்த பின்னணியில்,  அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஐக்கிய ஜனதாதளாம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) போன்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது, அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய இந்திய ராணுவத்தை தூண்டியுள்ளது. நாடு முழுவதும் இருந்து வரும் கருத்துக்களை இந்திய ராணுவம் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறது. அக்னிவீரர்களுக்கு சிக்கல் ஏதும் ஏற்படாமல் இருப்பதையும், அவர்களது செயல்பாட்டு திறன் அப்படியே இருப்பதையும் இது நோக்கமாக கொண்டுள்ளது. இத்தகைய ஆய்வுகளை ராணுவம் மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறை அமைச்சகமும் தனிப்பட்ட முறையில் செய்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுதொடர்பான பரிந்துரைகளில், அக்னிவீரர்களின் சேவை காலத்தை 4 ஆண்டுகளில் இருந்து 7-8 ஆண்டுகளாக உயர்த்தவும், சேவையை முடித்த பிறகு அவர்களை ராணுவத்தில் சேர்க்கும் சதவிகிதத்தை 25 சதவீதத்தில் இருந்து 60-70 சதவீதமாக உயர்த்தவும் இந்திய ராணுவம் முன்மொழிந்துள்ளதாக தெரிகிறது.

தொழில்நுட்ப பிரிவுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் அக்னிவீரர்களின் வயதை 23ஆக அதிகரிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பயிற்சியின் போது அடிபட்டு ஏற்படும் இயலாமை, வீரமரனம் அடைந்த அக்னிவீரரின் குடும்பத்திற்கு வாழ்வாதார உதவித்தொகை உள்ளிட்டவைகள் குறித்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஓய்வூதிய செலவுகளை குறைப்பதற்கும், இளம் வீரர்களை உருவாக்குவதற்கும் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், சில வேலைகளில் அனுபவமின்மை மற்றும் நிபுணத்துவம் இல்லாமைக்கு அவை வழிவகுக்கும் என்பன உள்ளிட்ட சில கவலைகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதாகவும் பாதுகாப்புதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தல்!

அதிகாரி பதவிக்குக் கீழே உள்ள பணியாளர்களில் பற்றாக்குறையை இந்திய இராணுவம் எதிர்கொள்ளும் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன. இது அனுமதிக்கப்பட்ட பலத்தை அடைய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம். ஓய்வூதிய செலவுகளை குறையாமல் பார்த்துக் கொள்ளுதல் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை சமரசம் செய்யாமல், இளம் வீரர்களை அதிகரிப்பது என இரண்டு இலக்குகளையும் அடைய அக்னிபாத் திட்டத்தில் மாற்றங்களைச் செய்ய பரிந்துரைகல் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடக்கு எல்லையில் சீனா மற்றும் மேற்கு எல்லையில் உள்ள பாகிஸ்தான் ஆகிய இரு எதிரிகளும் தங்கள் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கைகளை தீவிரமாக மேம்படுத்தி வருகின்றன என்பதும் தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.

சிறிய மாற்றங்களுடன் அனுபவம் தொடர்பான சிக்கலை தீர்க்க முடியும் என்கிறார்கள். பழைய ஆட்சேர்ப்புத் திட்டத்தின்படி, இந்த முறையின் கீழ் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் பொதுவாக 35 வயதில் ஓய்வு பெறுவார்கள். சுபேதார் மேஜராக பதவி உயர்வு பெற்றவர்கள் 52 வயதில் ஓய்வு பெற்றனர். அவர்கள் ஒவ்வொரு செயல்பாட்டு திறன் மற்றும் பயிற்சியிலும் அனுபவம் வாய்ந்தவர்கள் முழுமையாக பயிற்சி பெற்றவர்கள் என அந்த தகவல்கள் கூறுகின்றன.

அக்னிவீரர்களின் 4 ஆண்டுகால சேவையின்போது, நிரந்த வீரர்களாக தேர்வாகி வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு அவர்கள் தங்களை நிரூபிக்க முயற்சிப்பது போட்டிகளுக்கு வழிவகுக்கும்.  இது அவர்கள் ஒரு யூனிட்டாக செயல்படும் வகையில் இது ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும். ஒற்றுமை இல்லை என்றால் ராணுவத்தின் செயல்பாடுகளை அது பாதிக்கும். துருப்புப் பயிற்சியைப் பொறுத்தவரை, இது தோராயமாக 11 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது, ஆனால் அது இப்போது ஆறு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.

வட இந்தியா முழுவதும் தீவிரமான தேர்தல் பிரச்சாரங்களின் போது, ​​அக்னிவீரர்கள் எதிர்கொள்ளும் சமூக-கலாச்சார பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் முன்னிலைப்படுத்தியுள்ளன. அக்னிவீரர்களுக்கு தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் தயங்குகின்றனர். ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கையாள்வதில் பயிற்சி பெற்ற அக்னிவீரர்கள் அவர்களது சேவை முடிந்து விடுவிக்கப்படும் பட்சத்தில், பிற பொருளாதார நடவடிக்கைகளுக்கு மாறவோ அல்லது வேலை தேடவோ அவர்களால் முடியாது. இது ராணுவமயமாக்கப்பட்ட சமூகத்திற்கு வழிவகுக்கலாம் அல்லது அதிருப்தியின் காரணமாக வேறு ஏதேனும் தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கலாம். அக்னிவீரர் சதவிகிதம்  30-40 சதவீதம் குறைக்கப்பட்டால் அதை நிர்வகிக்க முடியும் என அந்த அதிகாரி கூறுகிறார்.

click me!