நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. அந்த வகையில், 2024-25 கல்வியாண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ஆம் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
ஆனால், தேர்வு முடிவுகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக தேர்வு எழுதிய மாணவர்கள் குற்றம் சாட்டினார். வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், தேர்வு எழுதியவர்களில் 1500 பேருக்கு கருணை மதிப்பெண்கள் அளிக்கப்பட்டது, இதுவரை இல்லாத அளவுக்கு 67 பேர், 720 என்ற முழு மதிப்பெண்களை பெற்றது, குறிப்பாக ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 மாணவர்கள் 720 / 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்திருப்பது என நீட் தேர்வு முடிவுகள் தேசிய அளவில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை, நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்ததது. என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள், தேர்வு நேரம் குறைவாக இருந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் காரணமாக மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற்றுள்ளதாக தேசிய தேர்வுமுகமை விளக்கம் அளித்துள்ளது.
இந்த விளக்கம் போதுமானதாக இல்லை என்று அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இதையடுத்து, நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. யூ.பி.எஸ்.சி. (UPSC) முன்னாள் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட 4 பேர் கொண்ட குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், முறைகேடு செய்த முகமையே விசாரணை நடத்துவது நியாயமல்ல என்று சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நரேந்திர மோடி பதவியேற்பு: திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணிப்பு; காங்கிரஸ் பங்கேற்பு!
மேலும், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்க இளநிலை மருத்துவர்கள் கடிதம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மகாராஷ்டிர மாநில பாஜக கூட்டணி அரசு வலியுறுத்தியுள்ளது.
நீட் தேர்வு பணம் வாங்கி கொண்டு நடத்தப்படுவதாக அம்மாநில பாஜக கூட்டணி அரசே குற்றம்சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நடந்த முடிந்த நீட் தேர்வில் மராட்டிய மாநில மாணவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர மாநில மருத்துவ கல்வி அமைச்சர் ஹசன் முஷ்ரிஃப் குற்றம் சாட்டியுள்ளார். இவர் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சியை சேர்ந்தவர்.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தேசிய மருத்துவ கவுன்சிலில் முறையிட இருப்பதாகவும் மராட்டிய மாநில மருத்துவக் கல்வி அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையிடவும் அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.