நரேந்திர மோடி 3ஆவது முறையாக பதவியேற்கும் விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. நரேந்திர மோடி 3ஆவது முறையாக இன்று மாலை பதவியேற்கவுள்ளார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்சிக்கு பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நரேந்திர மோடி 3ஆவது முறையாக பதவியேற்கும் விழாவை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது. பிரதமர் பதவியேற்பு விழாவில் தங்களது கட்சி கலந்து கொள்ளாது என மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். புதிதாக தேர்வாகியுள்ள எம்.பி.க்களை சந்தித்து பேசிய மம்தா பானர்ஜி, இதுவரை தங்களுக்கு அழைப்பு வரவில்லை; அப்படியே வந்தாலும் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “மக்களவைத் தேர்தலில் 3இல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி வெற்றி பெற வேண்டும் என மோடி நினைத்தார். ஆனால், அவர்களால் பெரும்பான்மையை நெருங்கக் கூட பெற முடியவில்லை. அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்ற பாஜகவினரின் கனவு பொய்யாகிவிட்டது. கடந்த முறை எந்த விவாதமும் நடத்தாமல் மசோதாக்களை நிறைவேற்றினார்கள். ஆனால், இந்த முறை அப்படி செய்ய முடியாது.” என்றார்.
கங்கனாவை அறைந்த கைக்கு தங்க மோதிரம்! பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!
இந்த அரசாங்கம் ஜனநாயக விரோதமாகவும், அரசியலமைப்புக்கு புறம்பாகவும் அமைகிறது என்ற மம்தா பானர்ஜி, இந்த அரசாங்கத்துக்கு நமது வாழ்த்துகளை தெரிவிக்க முடியாது. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
இதனிடையே, பிரதமர் பதவியேற்பு விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்தியா கூட்டணி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று கூடியது. அதில், மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த முடிவை ராகுல் காந்தி தள்ளி வைத்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.