விமானப்படை ஓடுதளம் சட்டவிரோதமாக விற்பனை! பஞ்சாபில் அதிர்ச்சி சம்பவம்!

Published : Jul 02, 2025, 03:23 PM ISTUpdated : Jul 02, 2025, 03:24 PM IST
Indian Air Force

சுருக்கம்

பஞ்சாபில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஓடுதளம் போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம். 1997-ல் நடந்த இந்த மோசடியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரும் தொடர்புடையதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானை ஒட்டி அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகிலுள்ள பட்டுவல்லா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளம் ஒன்று சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

1962, 1965, 1971 ஆம் ஆண்டுகளில் நடந்த போர்களின்போது இந்திய விமானப்படை விமானங்களால் பயன்படுத்தப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஓடுதளம் இது.

மோசடி வெளிச்சத்துக்கு வந்தது எப்படி?

பஞ்சாபைச் சேர்ந்த உஷான் அன்சால் என்ற பெண்மணியும், அவரது மகன் நவீன் சந்த் என்பவரும் இந்த விமான ஓடுதளம் அமைந்துள்ள இடத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த ஓடுதள விவகாரம் குறித்து விரிவாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாநில ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு உத்தரவிட்டது.

28 ஆண்டுகளுக்கு முந்தைய மோசடி:

நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த மாதம் 20 ஆம் தேதி ஊழல் கண்காணிப்பு அமைப்பு தனது அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், 28 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 1997 ஆம் ஆண்டு, உஷா அன்சால் மற்றும் நவீன் சந்த் ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரிகள் சிலரின் உதவியுடன் போலிப் பத்திரங்களை தயாரித்து இந்த இடத்தை விற்பனை செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

விசாரணை தீவிரம்:

இந்த கண்டுபிடிப்புகளை அடுத்து, உஷா அன்சால் மற்றும் நவீன் சந்த் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பெரிய மோசடி சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த காவல்துறை டி.எஸ்.பி. கரண் சர்மா தலைமையில் ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பில் முக்கியத்துவம் வாய்ந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான நிலத்தையே போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்ட இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மன்னிப்பு கோரிய இண்டிகோ நிறுவனம்.. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு சிறப்பு வசதிகள் அறிவிப்பு!
இந்தியா நடுநிலையான நாடு அல்ல.. அமைதி தான் முக்கியம்.. புடினிடம் உறுதியாகக் கூறிய மோடி!