
Jaishankar Denies Donald Trump's Speech About India Pakistan War: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்தியாவின் முப்படைகளும் இணைந்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களை ஏவுகணை மூலம் தாக்கி அழித்தனர். இதில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்தது.
இந்தியா -பாகிஸ்தான் மோதல்
இதனால் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவம் அங்குளள ஏராளமான விமானப்படைத் தளங்களை தாக்கியது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இதன்பிறகு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலையீட்டின் பேரில் இந்தியா பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் அறிவித்தது சர்ச்சையானது. ''அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்'' என்று டிரம்ப் தெரிவித்தார்.
போரை நிறுத்தியதாக டிரம்ப் தம்பட்டம்
இதன் பிறகு டிரம்ப் ஒவ்வொரு முறையும் ''இந்தியா, பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன். இரு நாடுகளிடமும் வர்த்தகத்தை நிறுத்தி விடுவேன் என்று சொன்னதால் போரை நிறுத்தி விட்டனர்'' என்று கூறி வந்தார். ஆனால் போர் நிறுத்ததில் மூன்றாம் நாடுகளின் தலையீடு இல்லை. பாகிஸ்தான் கெஞ்சியதால் போர் நிறுத்தப்பட்டது என்று பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.
ஜெய்சங்கர் விளக்கம்
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், டிரம்ப் போரை நிறுத்துவதாக கூறுவதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக ஒரு பேட்டியில் பேசிய ஜெய்சங்கர், ''மே 9 அன்று இரவு, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பிரதமர் மோடியிடம் பேசிக் கொண்டிருந்தபோது நான் அங்கேயே இருந்தேன். 'சில விஷயங்களை இந்தியா ஏற்காவிட்டால் பாகிஸ்தான் ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கும்' என்று வான்ஸ் கூறினார். ஆனால் பிரதமர் மோடி பாகிஸ்தானின் அச்சுறுத்தலுக்கு அசைந்து கொடுக்கவில்லை. இந்தியா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் என்று பிரதமர் மோடி தெளிவாக கூறினார்'' என்று தெரிவித்தார்.
இதுதான் நடந்தது
''அன்றிரவு பாகிஸ்தான் பெரிய தாக்குதலை நடத்தியது. அதற்கு நாங்கள் உடனடியாக பதிலடி கொடுத்தோம். மறுநாள் காலை, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ என்னை அழைத்து, பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். என் தனிப்பட்ட அனுபவத்தில் நடந்தது இதுதான்''என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
டிரம்ப்பின் பேச்சு வர்த்தகத்தை பாதிக்குமா?
டிரம்பின் கூற்றுக்கள் இந்தியா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்குமா? என்று கேட்டபோது, "நான் அப்படி நினைக்கவில்லை. வர்த்தகத் துறை வல்லுநர்கள் தங்கள் வேலையைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் மிகவும் தொழில்முறை மற்றும் கவனமாக இருக்கிறார்கள்" என்று ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
அணுசக்தி மிரட்டலுக்கு இந்தியா இந்தியா அஞ்சாது
பஹல்காம் தாக்குதலை "பொருளாதாரப் போர்" என்று விவரித்த ஜெய்சங்கர், பயங்கரவாதிகள் எந்த தண்டனையும் இல்லாமல் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்றும், அணுசக்தி மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது எனவும் தெரிவித்தார். பாகிஸ்தானிலிருந்து உருவாகும் பயங்கரவாதத்திற்கு எதிராகப் பதிலடி கொடுப்பதைத் தடுக்க அணுசக்தி மிரட்டலை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.