
ஜம்முவை குறிவைத்து தாக்கிய பாகிஸ்தான் : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சூழல் அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை இரவு ஜம்முவில் உள்ள முக்கிய இடங்களை, ஜம்மு சிவில் விமான நிலையம் உட்பட பல இடங்களை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன்கள் அடுத்தடுத்து சீறி வந்தது. மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும், இந்தியாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்பு விரைவாக செயல்படுத்தப்பட்டு, அனைத்து ஏவுகணைகளும் இலக்குகளைத் தாக்கும் முன்பே இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.
இந்தத் தாக்குதல் முயற்சியால் ஜம்முவில் நகரம் முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பின் மீது இந்தியா பதிலடி கொடுத்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஒரு நாள் கழித்து இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
முன்னதாக, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, "பதற்றத்தைக் குறைக்கும் தேர்வு பாகிஸ்தானிடம் உள்ளது" என்று கூறி, விரோதப் போக்கைத் தொடங்கியதற்காக இஸ்லாமாபாத்தை குற்றம் சாட்டினார். இந்தியாவின் இராணுவத் தாக்குதல்கள் தீவிரவாதிகள் இடங்களை மட்டுமே இலக்காக கொண்டவை என தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீநகர், பதான்கோட், அமிர்தசரஸ், லூதியானா, சண்டிகர், புஜ் மற்றும் பிற இடங்கள் உட்பட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட இந்திய இடங்களை இரவில் தாக்க பாகிஸ்தான் முயன்றது, ஆனால் இந்த முயற்சிகள் திறம்பட முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாக தெரிவித்திருந்தது. மேலும் இந்தியாவின் பதில் தாக்குதலின் போது லாகூரில் ஒரு பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்பு அழிக்கப்பட்டது.