
ஆபரேஷன் சிந்தூர் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 9 பயங்கரவாத அமைப்புகளின் அலுவலகம், பயிற்சி மையம் அழிக்கப்பட்டது. இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் இந்தியா எல்லைகள் மீது நேற்று இரவில் இருந்து தாக்குதில் நடத்திய நிலையில் இந்திய பதிலடி வழங்கி வருகிறது. இதனையடுத்து இன்று (மே 8ஆம் தேதி வியாழக்கிழமை ) வெளியுறவு அமைச்சகம் இரண்டாவது நாளாக பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி பல்வேறு தகவல்களை வழங்கியது.
இந்த சந்திப்பின் போது, வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் இறுதி ஊர்வலத்தின் புகைப்படத்தைக் காட்டி, "தாக்குதலில் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டிருந்தால், லஷ்கர்-இ-தொய்பா தளபதி ஹாஃபிஸ் அப்துல் ரவூஃப் இறுதி ஊர்வலத்தில் ராணுவ அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மேலும் கூறுகையில், "தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கும் பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதிகள் உடல்களுக்கு ஏன் பாகிஸ்தான் கொடியில் போர்த்தப்பட்டனர்? என கேள்வி எழுப்பினார். பாகிஸ்தானின் பிம்பம் உலகளவில் பயங்கரவாத மையமாக உள்ளது. பாகிஸ்தான் அபோதாபாத்தில் ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தது." எனவும் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு எதிராக நிறைய தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறிய அவர், முதலாவதாக, பஹல்காமில் நடந்த தாக்குதல் பதற்றம் அதிகரிக்க முதல் காரணம், அதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்', லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு அங்கம்." என்றார்.
"பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தானுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். 26/11 மற்றும் பதான்கோட் போன்ற பயங்கரவாதத் தாக்குதல்களுக்கான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானுக்கு வழங்கியது, ஆனால் அது விசாரணையில் ஒருபோதும் ஒத்துழைக்கவில்லை. பதான்கோட் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமதுவின் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை நாங்கள் வழங்கினோம், ஆனால் பயங்கரவாதிகளைப் பாகிஸ்தான் பாதுகாத்து வருவதாக கூறினார்.
"ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு (UNSC) அனைத்து தகவல்களையும் நாங்கள் வழங்கி வருகிறோம். TRF பற்றியும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன. UNSC அறிக்கையில் TRF பெயரைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வந்தபோது, பாகிஸ்தான் மட்டுமே எதிர்த்தது. இது பாகிஸ்தான் இன்னும் பயங்கரவாதக் குழுக்களுக்கு கேடயமாக இருப்பதைக் காட்டுகிறது." என விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.