இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளது. இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மன்மோகன் சிங் மறைவு
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 92. உடல்நலக்குறைவு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்துள்ளது.
undefined
வெறும் அரசியல்வாதியாக மட்டுமின்றி புகழ்பெற்ற பொருளாதார நிபுணராக திகழந்தவர் மன்மோகன் சிங். உடல்நலக்குறைவு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கிய அவர் அவர் சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்ற மன்மோகன் சிங் கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (யுபிஏ) அரசின் பிரதமாராக இருந்தார்.
பொருளாதார சீர்திருத்தவாதி
இந்தியாவில் முக்கிய பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்ட மன்மோகன் சிங் மறைவால் நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்பட நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கள் செய்தியில், ''இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்பால் நாடே துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான பின்புலத்தில் இருந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்த அவர் பிரதமராக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்'' என்று கூறியுள்ளார்.
7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ''முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு வருத்தம் அளிக்கிறது. பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. தலைவர் கலைஞர், மன்மோகன் சிங் உடன் இணைந்து அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தினர். குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்'' என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது இன்று நடைபெற இருந்த, திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செயப்பட்டுள்ளன. மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதிச்சடங்கு எப்போது?
மேலும் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி மன்மோகன் சிங் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடத்த உள்ளது. மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு நாளை நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.
மன்மோகன் சிங் மறைவுக்கு பல்வேறு மாநில அரசு சார்பிலும் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கர்நாடகாவில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும் இன்று ஒரு நாள் அரசு விடுமுறை விடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மன்மோகன் சிங் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன.