நிஜ வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

By Manikanda PrabuFirst Published Dec 6, 2023, 3:43 PM IST
Highlights

நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளில் செயற்கை நுண்ணறிவை இந்தியா பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாடு 2023 தலைநகர் டெல்லியில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவின் எதிர்காலத்தை குறிப்பாக சுகாதாரம், கல்வி மற்றும் பிற துறைகளை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவின் (AI) குறிப்பிடத்தக்க பங்கை வலியுறுத்தினார். 

அடுத்த பத்தாண்டுகளில் சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவற்றை இந்தியா எவ்வாறு பார்க்கிறது என்பதில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும் என்று ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு பற்றிய இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அவர், செயற்கை நுண்ணறிவை அரசாங்கம் பயமுறுத்தும் தொழில்நுட்பமாக பார்க்கவில்லை; மாறாக, கடைசி மைல் வரை செயற்கை நுண்ணறிவின் திறன்களைப் பயன்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றார்.

Latest Videos

“இந்தியா 2021 ஆம் ஆண்டிலிருந்து இதைச் சொல்லி வருகிறது. புதுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தை விரிவுபடுத்தும்போது, பாதுகாப்புக்கு சமமான முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் மிகைப்படுத்த முனைகின்றன. ஆனால், இந்தியாவின் நிலைப்பாடு செயற்கை நுண்ணறிவை அதிகமாக வெறித்தனமாக ஆக்குவதில்லை. அதேசமயம், நமது காலத்தின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக செயற்கை நுண்ணறிவை நாங்கள் கருதுகிறோம். டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதாரத்தின் இயக்கவியலாக இதை நாங்கள் கருதுகிறோம். AI இன் திறனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், ஆனால் அதே நேரத்தில் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் எளிதில் ஒழுங்குபடுத்தக்கூடிய பாதுகாப்பு, பொறுப்புகூறல் விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.” என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு உத்தி


இந்தியாவின் அடுத்த கட்ட செயற்கை நுண்ணறிவு பற்றி பேசிய அமைச்சர், செயற்கை நுண்ணறிவுடன் கிட்டத்தட்ட அனைவரும் இணைந்துள்ளோம். நாங்கள் அத்தொழில்நுட்பத்தில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். செமிகண்டக்டர்களுக்கு செய்ததைப் போல செயற்கை நுண்ணறிவுக்கும் செய்யப்படும் என்றார்.

எலான் மஸ்க் அல்லது சாம் ஆல்ட்மேனுடன் போட்டியிடுவதை விட நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளில் செயற்கை நுண்ணறிவை இந்தியா பயன்படுத்துவதாக மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். “எங்கள் கவனம் தற்பெருமை கொள்வதற்கோ; தலைப்புச் செய்திகளுக்கோ; எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேனுடன் போட்டியிடுவதற்கோ அல்லது அடுத்த நோபல் பரிசை வெல்வதற்கோ அல்ல. நிஜ வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.” என்றார்.

தொழில்நுட்பம் மக்களின் வாழ்க்கையை மாற்றும்; அரசாங்கங்களை விரைவாகவும் சிறப்பாகவும் செயல்பட வழிவகுக்கும் என்பதில் உறுதியாக உள்ளவர் நமது பிரதமர். எனவே நமக்கான செயற்கை நுண்ணறிவானது நிஜ வாழ்க்கை பயன்பாட்டு நிகழ்வுகளை இலக்காகக் கொண்ட திறன்களை உருவாக்கப் பயன்படும் என அமைச்சர் கூறினார்.

“சுகாதாரத்தின் ஆழமான திறன்களை உருவாக்கி வருகிறோம். 1.2 பில்லியன் இந்தியர்கள், பல்வேறுபட்டவர்களாக இருப்பதால், பல்வேறு வகையான உடல்நலம் மற்றும் ஆரோக்கிய விஷயங்கள் உள்ளன. எனவே, சுகாதாரம், கல்வி மற்றும் திறன் ஆகியவற்றை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கும்.” என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்.

செயற்கை நுண்ணறிவின் சவால்களை கையாள்வது


சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தில் உள்ள நச்சுத்தன்மையின் அடிப்படையில் செயற்கை நுண்ணறிவை கையாள்வதில் சின்னச்சின்ன சவால்கள் உள்ளதாக அமைச்சர் கூறினார். “தவறான தகவல்களையும், டீப்ஃபேக்குகளை பாதுகாப்பான முறையில் நாங்கள் கையாள்கிறோம். இணையத்தில் உள்ள தளங்களுக்கான சட்டப் பொறுப்பு வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம். செயற்கை நுண்ணறிவு அல்லது அது அல்லாத சைபர்ஸ்பேஸ் என்பது சட்டங்களை எட்டாத இடமாகவும், பொறுப்புக்கூறல் இல்லாத இடமாகவும் இருக்க முடியாது. எனவே, அதற்கு உதவுவதற்கும், செயல்படுத்துவதற்கும் பொறுப்பானவர்கள் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூற வேண்டும்.” என்றார்.

டிஜிட்டல் இந்தியா சட்டம் தேர்தலுக்கு முன் வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!

இந்தியாவின் செமிகண்டக்டர் அணுகுமுறை


70 ஆண்டுகளுக்கும் மேலாக புறக்கணிக்கப்பட்ட செமிகண்டக்டர் துறையில் இந்தியா இன்று சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் ஐபி மற்றும் சாதனங்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் மிகவும் துடிப்பான வடிவமைப்பு சுற்றுச்சூழல் அமைப்பு நம்மிடம் உள்ளது. நம்மிடமிருக்கும் ஒவ்வொரு பெரிய செமிகண்டக்டர் பிராண்டிலும் R&D மையங்கள் உள்ளன. நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். போட்டி இருப்பதால், உற்பத்தியில் முதலீடுகளை விரைவாகப் பெறுவது எளிதானது அல்ல என்றார்.

மேலும், உயர்கல்வி அமைப்பில் 85000 பொறியாளர்களின் திறமைக் குழுவை உருவாக்கும் பொருட்டு அடுத்தக்கட்டத்துக்கு நரந்துள்ளோம். இத்திட்டங்கள் ஏற்கனவே செயல்பட தொடங்கியுள்ளன. திறமைக் குழுவின் அடிப்படையில் இந்தியர்களாக நாங்கள் பங்களிப்போம் என்றும் அவர் கூறினார்.

செமிகண்டக்டர் சந்தையாக இந்தியா


செமிகண்டக்டர்களுக்கு இந்தியா 120 பில்லியன் டாலர் சந்தையாக இருக்கும் என்று மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். “எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தித் தொழில் வளர்ந்து வருகிறது. புவியியல் பரப்பின்படி, தைவான் அல்லது கொரியாவாக நாம் இல்லை. அதேசமயம், நநம்பகமான நாட்டின் பக்கமும் இல்லை. எனவே, புவிசார் அரசியல் நன்மைகள் இருப்பதால் நமக்கான சந்தை தேவை இருக்கும். மேலும் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் திறமை ஆகிய துறைகளில், உலகின் சிறந்தவற்றுடன் நாம் போட்டியிடுகிறோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

click me!