
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை ஒட்டிய நான்கு மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் வியாழக்கிழமை மாலை (மே 29ஆம் தேதி) முழு அளவிலான சிவில் ராணுவ பயிற்சியை மேற்கொள்ள இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது.
பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து, மே 7 மற்றும் 8 தேதிகளில் இந்தியாவின் முப்படைகளின் ஒருங்கிணைப்பில் பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருக்கும் பயங்கரவாத முகாம்களின் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அண்டை நாடுகளின் தாக்குதலில் இருந்து தப்பிப்பது, சிவில் பாதுகாப்பு தயார் நிலையை மேற்கொள்வதற்கு ஏதுவாக நாளை, மே 29ஆம் தேதி ராணுவ பயிற்சி மேற்கொள்ள ராணுவம் முடிவு செய்து இருக்கிறது. போர் சூழ்நிலைகளை உருவகப்படுத்தி, விமானத் தாக்குதல் சைரன்கள், மின்தடை, பொதுமக்கள் வெளியேற்ற நெறிமுறைகள் மற்றும் பொதுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை பயிற்சிகளில் அடங்கும். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் எல்லை மாவட்டங்களில் வசிப்பவர்கள் பயிற்சிகளின் போது அமைதியாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோன்ற சிவில் பாதுகாப்பு பயிற்சிகள், மே 7 அன்று நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் போர் 1971ஆம் ஆண்டு நடந்தது. அப்போது இதுபோன்ற பயிற்சி நடத்தப்பட்டது. அதற்குப் பின்னர் மே 7 ஆபரேஷன் அபியாஸ் என்ற பெயரில் நடத்தப்பட்டு இருந்தது. இதையடுத்துதான், சில மணி நேரங்களில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தானில் இருப்பிட கொண்டு இருக்கும் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்டது.
ஆபரேஷன் அபியாஸ்
ஆபரேஷன் அபியாஸின் போது, பல பகுதிகளில் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலிக்கப்பட்டன, அதே நேரத்தில் பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் அவசரகால நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. சாத்தியமான தாக்குதல்களின் போது மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது, மற்றவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
உள்ளூர் காவல்துறை, பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு சேவைகள் மற்றும் ஆயுதப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை இந்தப் பயிற்சிகள் உள்ளடக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பயிற்சிகள் தொடங்குவதற்கு முன்பு ஒலிபெருக்கிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் சிறப்பு எச்சரிக்கைகள் மற்றும் பொது அறிவிப்புகள் செய்யப்படும்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தின் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இதுபோன்ற பரந்த அளவிலான சிவில் பாதுகாப்புப் பயிற்சிகளை நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்தப் பயிற்சிகள் எதிரி படைகளுக்கு எச்சரிக்கை செய்தி என்று பாதுகாப்பு ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.