ஒரு நிமிடத்தில் 600 தோட்டாக்கள் பாயும்..! மிரள வைக்கும் AK203..

By Thanalakshmi VFirst Published Dec 6, 2021, 3:03 PM IST
Highlights

இந்திய ரஷ்ய கூட்டு நிறுவனம் மூலம் உத்தரபிரதேசத்தின் அமேதியில் சுமார் 6 லட்சம் ஏகே 203 வகை துப்பாக்கிகளை தயாரிப்பதற்கான உடன்பாடு ஒப்பந்தமாகியுள்ளது.
 

டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்கெய் ஷோய்கூ ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். கடந்த 2019 ஆம் ஆண்டு  கலாஷ்னிகோவ் சீரிஸ் சிறிய ஆயுதங்களின் உற்பத்தி தொடர்பாக இந்தியா ரஷ்யா இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் சிறு திருத்தம் செய்யப்பட்டு, அந்த புதிய ஒப்பந்தமும் இன்று கையெழுத்தானது.

அப்போது இரு நாட்டு உறவில் பாதுகாப்பு துறை ஒத்துழைப்பு மிக முக்கியமானது என்றும்  பாதுகாப்பு துறை  ஒத்துழைப்பு இதற்கு முன் இல்லாத வகையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும்  சவாலான சூழலிலும்  இந்தியாவின் மிக பெரிய கூட்டாளியாக ரஷ்யா இருக்கும் என்று நம்புவதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அரசுமுறைப் பயணமாக டெல்லி வரும் ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். குறிப்பாக இந்தியா - ரஷ்யா இடையிலான ராணுவ உறவை மேம்படுத்துவது தொடர்பான அம்சங்கள் இந்த சந்திப்பின்போது இடம்பெறவிருப்பதாக கூறப்படுகிறது. 

ரஷ்யாவிடம் இருந்து ஏ.கே.203 ரக துப்பாக்கியை வாங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட எஸ்-400 ரக வான் பாதுகாப்பு தொகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியும் அப்போது நடைபெறவுள்ளதாக இந்திய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின் நவீன வடிவமாக அமைந்திருக்கும் இந்த ஏ.கே 203 ரக துப்பாக்கிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுத தளவாடங்களை தயாரிக்கும் மிக்கைல் கலாஷ்னிக்கோவ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் ரஷ்யா - இந்தியா நாடுகளுக்கிடையேயான இதுதொடர்பான பேச்சுவார்த்தை இழுக்கடித்துக்கொண்டே வந்தது. இந்நிலையில் இதற்கு இரு நாடுகளிடையே தற்போது ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. 

இந்த ஏ.கே 203 துப்பாக்கிகள் நிமிடத்திற்கு 600 தோட்டாக்களை உழிழும் சக்தி வாய்ந்தவை. குறைவான எடை கொண்ட இந்த வகை துப்பாக்கிகள் துல்லியமாகவும் ஆழமாக பாயும் திறன் கொண்டவை. காலநிலை மாற்றத்திலும் இலக்கை நோக்கி பாயும் எனவும் எளிதில் பராமரிக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய ராணுவத்தில் தற்போது 7.62 மி.மீ துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் குளிரிகாலங்களில் இவ்வகை துப்பாக்கிகளில் தொட்டாக்கள் சிக்கி கொள்வது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், அதற்கு பதிலாக 7.63  x 39 மி.மீ தாக்குதல் திறன் கொண்ட, ஏ.கே. 203 துப்பாக்கிகள் தயாரிப்பின் முடிவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் இந்த வகை துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.

click me!