பாகிஸ்தானை குறிவைத்து தாக்கும் ஏவுகணை - ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கும் இந்தியா

 
Published : Oct 21, 2016, 02:49 AM ISTUpdated : Sep 19, 2018, 03:08 AM IST
பாகிஸ்தானை குறிவைத்து தாக்கும் ஏவுகணை - ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கும் இந்தியா

சுருக்கம்

பாகிஸ்தானின் எந்த இலக்கையும் குறிவைத்து தாக்கும் வகையிலான நவீன பிரமோஸ் ஏவுகணையை ரஷ்ய தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தியா தயாரிக்க உள்ளது.

கோவாவில் நடந்து முடிந்த பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த ரஷ்ய அதிபர் புதினுடன் இந்தியா தரப்பில் பல்வேறு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. முக்கியமாக ராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

நீர்மூழ்கி கப்பல், விமானத்தில் இருந்து சிறிய இலக்கை தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் பெறுவதும் இதில் இடம் பிடித்து இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. நீர்மூழ்கி கப்பல் விற்பனை, எஸ்-400 வான் பாதுகாப்பு முறை கொள்முதல் திட்டங்கள் மட்டுமே வெளிப்படையாக அறிவிக்கப்பட்டன.

ஆனால் புதின், ரஷ்ய நாட்டு பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, ஏவுகணை தொழில்நுட்பம் மேம்பாடு குறித்து தகவல் வெளியிட்டார். அதில் பிரமோஸ் ஏவுகணை தொழில்நுட்பத்தை மேம்படுத்த இந்தியாவிற்கு ரஷ்யா உதவ உள்ளது.

தரை, கடல், விமானம் ஆகிய இடங்களில் இருந்து ஏவப்படும் பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு தூரத்தை அதிகரிக்க இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து செயல்படும். மேலும் 5வது தலைமுறைக்கான விமானம் தயாரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மட்டும் தெரிவித்தார்.

தற்போது இந்தியாவில் இருக்கும் பிரமோஸ் ஏவுகணை அதிகபட்சமாக 300 கிமீ தூரம் பாய்ந்து இலக்கை தாக்கக்கூடியது. ரஷ்யா உதவியுடன் நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் பிரமோஸ் ஏவுகணையின் இலக்கு 2 மடங்காக அதாவது 600 கிமீ தூரம் பாயக்கூடிய வகையில் தயார் செய்யப்பட உள்ளது.

ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு அமைப்பில் இந்தியா சேர்ந்ததன் பயனாக இந்த தொழில்நுட்பத்தை வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. 
இந்த நவீன பிரமோஸ் ஏவுகணை மூலம் பாகிஸ்தானின் எந்த ஒரு இடத்தையும் குறிவைத்து தகர்த்தெறிய பிரமோஸ் ஏவுகணையால் முடியும். ஆளில்லா ரகசிய விமானம் போல் எதிரிகளின் கண்களில் சிக்காமல் குறிப்பிட்ட இலக்கை தாக்கும் வல்லமை பெற்றது.

எந்த இலக்கையும், எந்த திசையில் இருந்தாலும் எதிரிநாட்டு ஏவுகணை பாதுகாப்பு கருவியின் கண்காணிப்பில் சிக்காமல் சென்று தாக்கும் வல்லமை பெற்றது. எடுத்துக்காட்டாக எதிரிகள் மலைப்பகுதியில் பாதுகாப்பாக மறைந்திருந்தாலும் நவீன பிரமோஸ் ஏவுகணை மூலம் தாக்க முடியும்.
* ஏவுகணை தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்பில் கடந்த ஜூன் மாதம் இந்தியா சேர்ந்தது.

* ரஷ்யா உதவியுடன் நவீன பிரமோஸ் ஏவுகணையை இந்தியா தயாரிக்க உள்ளது. இது 600 கிமீ அதிகமான தூரத்தில் உள்ள இலக்கையும் குறிவைத்து தாக்கும் வல்லமை பெற்றது.

* எதிரிகள், தீவிரவாதிகள் பதுங்கி இருக்கும் இடத்தை இந்தியாவில் இருந்தே நவீன பிரமோஸ் ஏவுகணை மூலம் இனி நாம் தகர்த்தெறியலாம்.

* நவீன பிரமோஸ் ஏவுகணை தயாரித்து விற்கவும் இந்தியாவிற்கு இனி உரிமை உண்டு. வாங்குவதற்கு வியட்நாம் ஆர்வமாக உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!
பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பது கட்டாயம்..! முதல்வர் அதிரடி உத்தரவு..!