
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்தியா-பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தம் பற்றி வெளியிட்ட அறிக்கைகளுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
"ஆபரேஷன் சிந்துர்" மற்றும் இந்தியா-பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தின் பின்னணியில், டிரம்ப் மற்றும் ரூபியோவின் கூற்றுகள் ஒவ்வொன்றுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. வெளியுறத்துறை செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வான் இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறார்.
இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்துவதற்கான அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்காதான் ஏற்பாடு செய்தது என்றும், மிகவும் ஆபத்தான அணு ஆயுதப் போர் மூளாமல் தடுத்துவிட்டதாகவும் டிரம்ப் கூறினார். மேலும், அமைதி உடன்படிக்கை ஏற்படுவதற்காக வர்த்தகத்தை நிறுத்திவிடுவதாக அச்சுறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய தயாராக இருக்கிறது என்றும் இந்தியாவும் பாகிஸ்தானும் நடுநிலையான இடத்தில் வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் டிரம்ப், ரூபியோ இவரும் கூறியிருந்தனர். குறிப்பாக, டிரம்ப் தனது பேச்சுகளில் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளையும் நிகராகக் குறிப்பிட்டது சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்நிலையில், வெளியுறவுத்துறை அளித்துள்ள பதிலில், இரு நாடுகளும் ராணுவ இயக்குநர்கள் ஜெனரல் (DGMOs) மூலமாக நேரடி ஒப்பந்தம் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் இந்திய விமானப்படையின் (IAF) திறமையான தாக்குதல்களால் இது சாத்தியமானது என்றுயும் வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.
அணு ஆயுத பயன்பாடு குறித்த கவலைகளை மறுக்கும் வகையில், ராணுவ நடவடிக்கை பாரம்பரிய முறையில் மட்டுமே இருந்தது என்றும், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது அமெரிக்காவுடன் வர்த்தகம் குறித்து எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது.
காஷ்மீர் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இன்னொருவரின் தலையீடு இல்லாமல், இருதரப்புக்கு இடையில் மட்டுமே நடைபெறும் எனவும் அதுவும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை (PoK) திரும்பப் பெறுவது குறித்து மட்டும்தான் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தானை இணையாகக் கருதும் வகையில் எந்தவொரு கருத்தும் இல்லை என்றும், சர்வதேச சமூகம் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது என்றும் வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் பொதுவான இடத்தில் வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமெரிக்கா கூறிவருவதை நிராகரித்துள்ள இந்தியா, அத்தகைய பேச்சுவார்த்தைகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
இந்த விளக்கத்தை வெளியிட்ட இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், டிரம்ப் மற்றும் ரூபியோவின் அறிக்கைகள் தவறானவை என்றும், உண்மைக்குப் புறம்பானவை என்றும் கூறினார். இந்தியா தனது இறையாண்மையில் உறுதியாக இருப்பதாகவும், எந்தவொரு வெளிநாட்டு தலையீட்டையும் ஏற்காது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்.