
ராணுவத்திற்கு உதவிய சிறுவன் : பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இந்திய சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியது. இதில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் போர் சூழல் உருவானது. இரு தரப்பிலும் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியாவான் வான் பாதுகாப்பு கவசம் ட்ரோனை நடுவானில் தாக்கி அழித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாட்டு மக்கள் அனைவரும் இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நின்றனர். தமிழக அரசு சார்பாக சென்னையில் மிகப்பெரிய அளவிலான பேரணி நடத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில் இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் பல்வேறு பிரபலங்கள் நிதிகளை வழங்கி வருகிறார்கள். அதன் படி கரூரில் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தான் 10 மாத காலமாக சேமித்து வந்த பணத்தை ராணுவத்திற்கு வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது சதீஷ்குமார்- பவித்ரா தம்பதியின் மகன் தன்விஷ் தான் உண்டியலில் சேகரித்த பணத்தை மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்கினார்.
இதனை பார்த்த மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிறுவனர், தான் கடந்த 10 மாதங்களாக பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுத்த பணத்தை சேமித்து வந்ததாகவும், எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தனது பணத்தை ராணுவ வீர்ரர்களுக்கு கொடுக்க வந்ததாக கூறினார். மேலும் குழந்தையின் தன்னலமற்ற சேவை மற்றும் தாராள மனப்பான்மைக்காக பல்வேறு தரப்பினரும் பாராட்டை தெரிவித்தனர்.