தடுப்பூசி செலுத்தும் பணியில் இந்தியா சாதனை... ஓராண்டில் இவ்வளவு டோஸ்களா?

By Narendran SFirst Published Jan 16, 2022, 5:58 PM IST
Highlights

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் இதுவரை 156 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறும் நிலையில் இதுவரை 156 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் இந்த 2 ஆண்டுகளில்  உலக மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டு விட்டது.  கொரோனா வைரஸும், அதன் உருமாற்றங்களின் தாக்கமும் இன்னும் தொடர்கிறது.  இந்த  கொரோனா வைரஸின் கோரப்பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள உலக நாடுகள் தடுப்பூசி கண்டிப்பிடித்து அதனை மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள்  கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16 ஆம் தேதி தொடங்கப்பட்டது.  புனே சீரம் நிறுவனத்தின் தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவன தயாரிப்பான கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் இங்கு போடப்படுகின்றன.  ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதால் மாரடைப்பு ஏற்படும், உயிரிழப்பு ஏற்படும் என தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த அச்சத்தை போக்கி, தடுப்பூசியின் அவசியம் குறித்து மாநில அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கின. இதனால் தடுப்பூசி செலுத்தும் மக்களின் எண்ணிக்கை  கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத் தொடங்கியது. இருந்த போதிலும்  பல தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வமின்றி இருந்தனர். பின்னர் மெகா தடுப்பூசி முகாம்கள், வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவது உள்ளிட்ட யுக்திகளை மாநில அரசுகள் கையாண்டன. இதன் மூலம் நல்ல ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்த துவங்கினர். இதன் காரணமாக கடந்த 7 ஆம் தேதி 150 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டது  என்ற மாபெரும் இலக்கை இந்தியா எட்டியது. இதுவரை 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில்,  இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து 15 - 18 வயதுடையோருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

அதேபோல் முன்களப் பணியாளர்களுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸும்  ஜனவரி 10 முதல் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 43.19 லட்சத்திற்கும் மேல் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. அதேபோல்  15-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 3,38,50,912 முதல் டோஸ் போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றுடன் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. இதுவரை 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 60 %  ஆகும்.  இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92 % அதிகமானோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருப்பதாகவும், 68 % அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி செலுத்தியிருப்பதாகவும் சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.  கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி  இன்று பிற்பகல்,  சிறப்பு தபால் தலையை மத்திய அரசு வெளியிடவுள்ளது.

click me!