வருடாந்திர தகவல் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக பல்வேறு நாட்டினர் மற்றும் நிறுவனங்களின் சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை சுவிட்சர்லாந்து ஒப்படைத்துள்ளது. இதன் கீழ் சுவிட்சர்லாந்து, இந்தியா உள்பட 101 நாடுகளுடன் கிட்டத்தட்ட 34 லட்சம் நிதிக் கணக்குகளின் விவரங்களைப் பகிர்ந்துள்ளது.
இந்தியாவுடன் பகிரப்பட்ட புதிய விவரங்கள் "நூற்றுக்கணக்கான நிதிக் கணக்குகள்" தொடர்பானவை என்று தெரிய வந்துள்ளது. இதில், சில தனிப்பட்ட நபர்கள், கார்ப்பரேட்கள் மற்றும் அறக்கட்டளைகளும் அடங்கும். இவர்கள் தங்களது பெயர்களில் பல்வேறு கணக்குகளின் கீழ் பணத்தை பதுக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
தகவல் பரிமாற்றத்தின் கீழ் நாடுகளுடன் சுவிஸ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி, வங்கியில் பணத்தை டெபாசிட் செய்திருப்பவர்களின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். மேலும், இந்த வங்கி தொடர்பாக நடந்து வரும் விசாரணைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதால், பணத்தை டெபாசிட் செய்திருப்பவர்களின் விவரங்களை சுவிஸ் வங்கி வெளியிடுவதில்லை. ஆனால் சந்தேகத்திற்குரிய வரி ஏய்ப்பு, பணமோசடி மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட பிற தவறான செயல்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி - மேற்கு வங்க கும்பல் கைவரிசை
சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட் குறித்த தகவல்களை வெளியிட்டு இருக்கும் கூட்டமைப்பு வரி நிர்வாகம் விடுத்திருக்கும் அறிக்கையில், நடப்பாண்டில் கூடுதலாக அல்பேனியா, புருனேய் தருஸ்சலாம், நைஜீரியா, பெரு, துருக்கி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகளும் வெளியிடப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்களின் வங்கி கணக்குகளை தொடர்ந்து நான்காவது ஆண்டாக இந்திய அரசு அதிகாரிகளிடம் சுவிஸ் வங்கி சமர்ப்பித்துள்ளது. பெரிய அளவில் இந்தியர்கள் சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால், யார், யார் பணம் டெபாசிட் செய்திருக்கிறார்கள் என்ற விவரத்தை வெளியிடவில்லை. 101 நாடுகளைச் சேர்ந்தவர்கள் சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ளனர்.
இந்தியாவுடன் கடந்த மாதம் இந்த தகவல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இனி அடுத்தது 2023ஆம் ஆண்டில் வங்கி கணக்கு விவரங்கள் வழங்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. முதன் முறையாக சுவிஸ் வங்கியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி, 2019ஆம் ஆண்டில் இருந்து சுவிஸ் வங்கி இந்தியாவுடன் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை வழங்கி வருகிறது. 2019ல் 75 நாடுகள் மட்டுமே சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்திருப்பவர்களின் விவரங்களை பெற்று இருந்தன.
சுவிட்சர்லாந்து நாட்டுடன் வங்கி விவரங்களை பெறுவது தொடர்பாக இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ரகசிய தகவல்களை தானாகவே சுவிஸ் வங்கி முன்பு வந்து இந்திய அரசுடன் பகிர்ந்து வருகிறது. இந்த தகவல் சட்ட விரோதமாக, வரி ஏய்ப்பு செய்து சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்தவர்கள், அங்கிருந்து பணம் எடுத்தவர்கள், அதில் இருந்து வருமானம் ஈட்டியவர்கள், முதலீடு செய்தவர்கள், சட்ட விரோதமாக பணம் பயன்படுத்தியவர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்கு ஏதுவாக இருக்கிறது என்று அதிகாரிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
பணம் டெபாசிட் செய்திருக்கும் இந்தியர்கள் குறித்து பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்து இருக்கும் தகவலில், ''தற்போது தென்கிழக்கு ஆசியாவில் வசித்து வரும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், அமெரிக்கா, பிரட்டன் போன்ற நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் சுவிஸ் வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ளனர்'' என்றனர்.
இந்தியர்களின் விவரங்களை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்து நீண்ட சட்ட வரையறைகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டது. வங்கி கணக்காளர்களின் தகவல்களை ரகசியமாக பாதுகாக்க வேண்டும் என்பது ஒப்பந்தங்களில் ஒன்றாகும். பரிமாறப்படும் தகவல்களில் பெயர், முகவரி, வசிக்கும் நாடு, வருமான வரி அடையாள எண், கணக்கு மற்றும் நிதி குறித்த தகவல்கள், கணக்கு இருப்பு, மூலதன வருமானம் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.