மோசமான கல்வித் தரம் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு 2-வது இடம் - 10 வயது மாணவனுக்கு 1-ம் வகுப்பு பாடத்தைக்கூட படிக்கத் தெரியவில்லை

First Published Sep 27, 2017, 10:09 PM IST
Highlights
India ranks 2nd in worst education


 

மிக மோசமான கல்வித்தரம் உள்ள நாடுகளில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளதாக உலக வங்கி அறிக்கை, அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தியா 2-வது இடம்

இந்தியாவில் படிக்கும் 2-ம் வகுப்பு மாணவனுக்கு ஒரு சிறு பத்தியில் ஒரு உள்ள சொல்லைக்கூட படிக்க தெரியவில்லை.

இந்த மோசமான கல்வி நிலை உள்ள 12 நாடுகளின் பட்டியலில் மாலவி நாட்டுக்கு அடுத்தபடியாக இந்தியா 2-ம் இடத்தை பிடித்துள்ளது என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இரண்டு இலக்க எண்ணை கழிக்கத் தெரியாத 2-ம் வகுப்பு மாணவர்கள் உள்ள 7 நாடுகளின் பட்டியலில் இந்தியா உலகிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சாதாரண கழித்தல் கணக்கு

இந்தியாவில் உள்ள கிராமப்புற பள்ளிகளில் 3-ம் வகுப்பு படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு 46-ல் 17-ஐ கழித்தால் எத்தனை என்பது கூட தெரியவில்லை .

5-ம் வகுப்பு படிக்கும் பாதி மாணவர்களுக்கும் இந்த எளிய கழித்தல் கணக்கு தெரியவில்லை என இந்தியாவின் கல்வி நிலை குறித்து அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கல்வி நெருக்கடி

உலக வங்கியின் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-

பள்ளிக்கு செல்வோரின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டும் பயனில்லை. அவர்களுக்கு அங்கு கற்றுத்தரப்படுகிறதா என்பது முக்கியம்.

உலகில் அடிமட்ட மற்றும் நடுத்தர வருவாய் உள்ள குடும்பங்களின் குழந்தைகளின் கல்வித்தரம் மிகவும் மோசமாக உள்ளது. ஒரு கல்வி நெருக்கடியே ஏற்பட்டுள்ளது.

மிகப்பெரிய அநீதி

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பியும் கல்வியை கற்றுத்தராமல் இருப்பது குழந்தைகளுக்கு இழைக்கப்படும் ஒரு மிகப்பெரிய அநீதி ஆகும்.

இதனால் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் கோடிக்கணக்கான குழந்தைகள் பின்னாட்களில் வேலைவாய்ப்பு பெற முடியாமல் மிகக்குறைந்த கூலிக்கு வேலை செய்யும் நிலை ஏற்படுகிறது.

வறுமை ஒழிப்பு

தொடக்க மற்றும் நடுநிலைக் கல்வியை சரிவர கற்றுத்தராமல் இருப்பதே இந்த மோசமான வாழ்க்கை நிலைக்கு காரணம். குழந்தைகளுக்கு கல்வியை கற்றுத்தராமல் உலகில் வறுமையை ஒழிப்பது என்பது சாத்தியமில்லை.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளில் பல வருடங்கள் பள்ளிக்கு சென்ற பிறகும் குழந்தைகளுக்கு எழுத, படிக்க தெரியவில்லை. எளிமையான கணக்கைக்கூட போட முடியவில்லை.

5-ம் வகுப்பு மாணவர்கள்

இவ்வாறு கற்பதில் உள்ள இடைவெளி சமூக வாழ்க்கையிலும் மிகப்பெரும் ஏற்றத்தாழ்வு தோன்ற காரணமாக ஆகியுள்ளது. இது ஒரு தார்மீக மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். கல்வி கற்றுத்தரப்படாமல் வெறுமனே பள்ளிக்குச் செல்வது வீணானதாகும்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு வளரும் நாடுகளில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிப்பேர்தான் 2-ம் வகுப்பு பாடத்தை படிக்க முடிகிறது. 5-ம் வகுப்பில் படிக்கும் பல மாணவர்களால் 1-ம் வகுப்பு பாடத்தில் உள்ள கேள்விகளுக்குக்கூட பதில் அளிக்க முடியவில்லை.

மாற்றம்

இப்பிரச்சினையை தீர்க்க இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கல்விக்கொள்கையில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அந்த உலக வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!