
இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிக்கான வாய்ப்புகள் இல்லை என, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகின்றன.
இரு தரப்பு கிரிக்கெட்
இந்தியா பாகிஸ்தானிலோ அல்லது பாகிஸ்தான் இந்தியாவிலோ சுற்றுப்பயணம் செய்து விளையாடும் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெறுவது இல்லை.
கடந்த 2008-ம் ஆண்டில் மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை தொடர்ந்து இந்த போட்டிகள் ரத்து செய்யப்பட்ட விட்டன.
அமித்ஷா
இந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இங்கிலாந்தில் இன்று நடைபெற உள்ளது.
இதற்கிடையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அமித்ஷா, மும்பையில் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
குஜராத் மாநில கிரிக்கெட் சங்கத் தலைவராகவும் அமித்ஷா பதவி வகித்து வருகிறார். பேட்டியின்போது இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் இரு தரப்பு கிரிக்கெட் போட்டி நடைபெறுமா? என கேள்வி எழுப்பப்பட்டது.
வாய்ப்பு இல்லை
அதற்குப் பதில் அளித் ஷா, ‘‘இரு நாடுகளுக்கு இடையே இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. அதே நேரத்தில் சர்வதேச அளவிலான போட்டிகளில் இரு நாடுகளும் பங்குபெறும்.
ஆனால் இந்தியா பாகிஸ்தானிலோ அல்லது பாகிஸ்தான் இந்தியாவிலோ வந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான வாய்ப்பு இல்லை’’ என்று கூறினார்.
திடீர் தேர்தல்
மகாராஷ்டிரா மாநில அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சியான சிவசேனாவுக்கும் பா.ஜனதாவுக்கும் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பா.ஜனதா முதல்வரான பட்நாவிஸ், திடீர் தேர்தலுக்கு தயாராக இருப்பதாக கூறி இருக்கிறார்.
அது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அமித்ஷா, ‘‘பட்நாவிஸ் என்ன அர்த்தத்தில் அப்படிக் கூறினார் என்றால், தங்கள் மீது திடீர் தேர்தல் திணிக்கப்பட்டால் அதைச் சந்திக்கத் தயார் என்றுதான் கூறியதாக’’ தெரிவித்தார்.
பேட்டியின்போது அமித்ஷா மேலும் கூறியதாவது-
பெருந்தலைவர் மோடி
‘‘இந்தியா விடுதலை அடைந்தபின்னர் நாட்டின் மிகப்பெரிய தலைவராக நரேந்திர மோடி உருவெடுத்து இருக்கிறார். வருகிற 2022-ம் ஆண்டுக்குள் உலகின் பெரிய சக்தியாக இந்தியாவை மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.
மோடி தலைமையில் உலகின் வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியா மாறி வருகிறது. பிரதமர் அலுவலகத்துக்கும் மோடி பெருமை தேடித்தந்து இருக்கிறார்.
மன்மோகன்சிங்
முந்ைதய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது அனைத்து மத்திய அமைச்சர்களுமே தங்களை பிரதமராக கருதிக்கொண்டனர். ஆனால், அவர்களில் ஒருவர் கூட பிரதமரை (மன்மோகன்சிங்) பிரதமராகக் கருதவில்லை.
ஜி.எஸ்.டி. வரி சட்டத்தை இயற்றுவதற்கான தகுதியும் துணிச்சலும் ேவறு எந்த ஒரு தலைவருக்கும் இல்லை. பருவநிலை மாற்றம் பிரச்சினையில் இந்தியா உலகத் தலைமை நாடாக உருவெடுத்ததை பாரிஸ் மாநாட்டில் பார்க்க முடிந்தது.
பெரிய சாதனை
தாஜா அரசியல் மற்றும் வாரிசு அரசியலுக்கு மோடி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வகுப்புவாதம், வாரிசு ஆட்சி மற்றும் தாஜா அரசியலுக்கு முடிவு கட்டியது எங்களுடைய மிகப்பெரிய சாதனையாகும்’’.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.