
கேரளாவின் முதல் மெட்ரோ ரெயிலான கொச்சி மெட்ரோ ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கப்பட்டது. அதன் சிறப்பு அம்சங்கள் இதோ….
செண்ட மேளம் இசை
கொச்சி மெட்ரோ ரயிலில் கதவுகள் திறந்தவுடன், பயணிகளை பரவசப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பாரம்பரிய செண்ட மேளத்தின் இசை ஒலிக்கும்.அதுமட்டுமல்லாமல், ரெயில் நிலையத்தில் இலவச வை-பை சேவை அளிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலத்தில் பணி நிறைவு
மும்பை மெட்ரோ ரயிலின் 11 கி.மீ தூர முதல் கட்ட சேவை தொடங்குவதற்கு 75 மாதங்கள் பிடித்தன. சென்னை மெட்ரோ ரயிலின் 4 கி.மீ தூர முதல் கட்ட பணிகள் முடிவதற்கு 72 மாதங்கள் ஆனது. ஜெய்பூரில் 9.02 கி.மீ தூர பணிகளுக்கு 56 மாதங்களும், 8.5 கி.மீ கொண்ட டெல்லி மற்றும் பெங்களூரு மெட்ரோ ரயிலின் முதல் கட்ட பணிகளுக்கு 50 மாதங்களும் பிடித்தன.
ஆனால் 13 கி.மீ கொண்ட கொச்சி மெட்ரோ ரயிலின் முதல் கட்டப் பணிகள் வெறும் 45 மாதங்களில் முடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி மின்சாரம்
சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் கொச்சி மெட்ரோ ரயில் முன்னுதா ரணமாக இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த மின் தேவையில் 25 சதவீதம் மின்சாரம் சூரிய சக்தி (சோலார்) மூலம் பெறும் வகையில் 23 நிலையங்களிலும் சோலார் பேனல்கள்பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 2.3 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும். இது தவிர 4 மெகாவாட் திறன் கொண்ட சோலார் மின் உற்பத்தி மையத்தை அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
தூண்களில் ‘பசுமை பூங்கா’
மெட்ரோ ரயிலுக்காக அமைக்கப்பட்ட பாலம் தாங்குவதற்காக 4 ஆயிரம் தூண்களில், ஒவ்வொரு 6-வது தூணிலும் ‘வெர்டிக்கல் கார்டன்’ அமைக்கப் பட்டுள்ளது. அதாவது, தூண்களில் செடிகள் வளர்க்கப்பட்டு, பசுமையாக மாற்றப்பட்டுள்ளது.
இலவச சைக்கிள் சேவை
கொச்சியில் இருந்து மெட்ரோ ரெயில் செல்லும் நகரங்களை சுற்றிப் பார்க்க வசதியாக பயணிகளுக்கு ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் இலவச சைக்கிள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
திருநங்கைகளுக்கு வாய்ப்பு
நாட்டிலேயே அதிக அளவிலான திருநங்கைகளுக்கு பணி வழங்கிய அரசு நிறுவனம் என்ற பெருமையும் கொச்சி மெட்ரோ ரயிலுக்கு கிடைத்துள்ளது.மொத்தம் 60 திருநங்கைகளுக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 23 பேர்டிக்கெட் வழங்குவது, பராமரிப்பு என பல்வேறு பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
அதிகமான பெண்கள்
கொச்சி மெட்ரோ ரயிலில் 80 சதவீத அளவுக்கு பெண்களே பல்வேறு பணிகளில் இருப்பார்கள். அதாவது ஆயிரம் பெண்கள் வரை பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் மூலம் அதிகமான பெண் ஊழியர்கள் கொண்ட அரசு நிறுவனம் என்ற பெருமையை பெறுகிறது.
படகு போக்குவரத்து
10 தீவுகளில் படகு சேவையை தொடங்கவும் கொச்சி மெட்ரோ தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ‘நீர் வழிப் போக்குவரத்து’ என்ற பெயரில் இத்திட்டத்துக்காக ரூ.819 கோடி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன்படி 2018 இறுதியில் இதன் முதல் கட்ட சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் பயணம்.
மெட்ரோ ரெயில் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டாலும், வர்த்தகரீதியான சேவை 19-ந் தேதியில் இருந்து தொடங்குகிறது. ஆலுவா நகரில் இருந்து காலை6மணிக்கு புறப்படும் ரெயில் இரவு 10 மணிவரை பழரிவாட்டம் வரை இயக்கப்படும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 216 முறை ரெயில்இயக்கப்பட உள்ளது.
கட்டணம்..
மெட்ரோ ரெயிலில் பயணிக்க குறைந்தபட்சம் ரூ.10 கட்டணமாகவும், அதிகபட்சம் ரூ.40 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.