ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என முன்னாள் தூதர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்
காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், இந்தியாவில் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கனடா பிரஜையான அவரது கொலையின் பின்னணியில் இந்திய அரசுக்கான தொடர்புகள் இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
இதனால், இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், கனடாவின் குற்றச்சாட்டுக்ளை அபத்தமானது என கூறி இந்தியா அதற்கு மறுப்பு தெரிவித்தது.
இதனிடையே, அமெரிக்க குடியுரிமை பெற்ற்றா காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனைக் கொல்ல இந்தியா சதி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கிடையே, ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் இந்தியாவின் ஒத்துழைப்பை கோருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.
இந்த நிலையில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இல்லை என முன்னாள் தூதர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். “இது ஒரு சிக்கலான பிரச்சினை. ஆனால், இந்தியா இதில் ஈடுபடவில்லை என்பதை நான் நிச்சயமாக அறிவேன். ஏனெனில் இந்தியா இந்த வகையான விஷயங்களில் ஈடுபடுவதில்லை.” என ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்த பிரச்சினையின் சிக்கலான தன்மையை ஒப்புக்கொண்ட அவர், உறுதியான ஆதாரங்கள் இல்லாதது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தியதுடன், இந்தியா அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடாது என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி: பிரதமர் மோடி பெருமிதம்!
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து பேசிய அவர், இந்தியாவை குற்றம் சாட்டுவதற்கு அமெரிக்காவின் தரப்பில் வேண்டுமென்றே எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என தெளிவு படுத்தினார். அமெரிக்க அமைப்பில் ஒரு பிரச்சினை நீதிமன்றத்திற்குச் சென்றால், அதுகுறித்த விவரங்களை வெளியிட வேண்டுமா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தூதரக உறவுகளில் மேலும் விரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, இருதரப்பிலும் விசாரணைகள் மூலம் விரைவான தீர்வு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.