சீனாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவிலும் வரும் நாற்பது நாட்களில் கொரோனா பாதிப்பு கூடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 39 பேருக்கு BF7 வகை கோரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிதோனை செய்யப்படுகிறது.
இதுவரை இருநூறு வகையான கொரோனா திரிபு வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சீனாவை மிரட்டிக்கொண்டிருக்கும் BF7 வகை கொரோனாவும் அடக்கம். இந்த BF7 வகை வைரஸ் பாதிப்பு சீனாவில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "கொரோனா தொற்று பரவாமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்துகிறது. பாதிப்பு அதிகரித்தாலும் சமாளிப்பதற்கான ஆயத்தப் பணிகள் செய்யப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளார்.
BF 7 Variant: இந்தியா முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் இடங்களில் மாதிரி பயிற்சி துவக்கம்!
இந்தியாவில் அடுத்து வரும் நாற்பது நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் முன்னெச்சரிக்கையுடன் நடவடிக்கை எடுத்தால் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் கட்டுப்படுத்தலாம் என்றும் அரசு வட்டார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இல்லாவிட்டால், ஜனவரியில் கொரோனா பாதிப்பு விஸ்வரூபம் எடுத்து புதிய அலை உருவாகலாம் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இரண்டு, மூன்று டோஸ்கள் போடப்படிருப்பதால் ஒட்டுமொத்தமாக நோய் எதிர்ப்பு சக்தி கூடியிருக்கிறது. இதுவே கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கும் அம்சமாகப் பார்க்கப்படுகிறது.